வெள்ளி, 21 ஜூலை, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 9

இயேசு கிறிஸ்து வாழ்ந்ததிற்கான இன்னுமொரு அத்தாட்சி;


“இயேசு வாழ்ந்ததற்கு அத்தாட்சி கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.” இப்படித்தான் வேதாகமம் சார்ந்த தொல்லியல் ஆய்வு (நவம்பர்/டிசம்பர் 2002) என்ற ஆங்கில இதழின் அட்டை பக்கம் அறிவித்தது. சுண்ணாம்பு கல்லில் இழைக்கப்பட்ட ஓர் எலும்பு பெட்டி அந்தப் பத்திரிகையின் அட்டையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. 70-⁠க்கும் இடைப்பட்ட குறுகிய காலங்களில் இத்தகைய எலும்பு பெட்டிகள் யூதர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இந்தப் பெட்டியின் ஒரு பக்கத்தில் அரமிய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதில், “யோசேப்பின் குமாரனும், இயேசுவின் சகோதரனுமாகிய யாக்கோபு” என எழுதப்பட்டிருந்ததாக அறிஞர்கள் ஒத்துக்கொண்டனர்.

நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுவுக்கு யாக்கோபு எனப்பட்ட ஒரு சகோதரன் இருந்தார் என்றும், அவர் மரியாளின் கணவராகிய யோசேப்பின் மகனாக கருதப்பட்டார் என்றும் வேதாகமம் கூறுகிறது. இயேசு தமது சொந்த ஊரில் போதித்த சமயத்தில், அந்தக் கூட்டத்தார் ஆச்சரியப்பட்டு, “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்டார்கள். (மத்தேயு 13:54-56; லூக்கா 4:22; யோவான் 6:42).

ஆம், அந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் நசரேயனாகிய இயேசுவைப் பற்றிய வருணனைக்குப் பொருந்துகின்றன. அந்தப் பெட்டியில் யாக்கோபு என குறிப்பிடப்பட்டுள்ளது இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாக இருந்தால், இயேசு வாழ்ந்ததற்கு “வேதாகமத்தை தவிர மிகப் பழமையான தொல்பொருள் அத்தாட்சி” இதுவாகத்தான் இருக்கும் என அடித்துக் கூறுகிறார் ஆன்ட்ரே லெமர்; இவர் பழங்கால கல்வெட்டுகளைப் பற்றி சொல்லும் நிபுணரும் வேதாகமம் சார்ந்த தொல்லியல் ஆய்வு பத்திரிகையில் வெளிவந்ததாக மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையின் எழுத்தாளரும் ஆவார். “பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்த மனிதர்களிலேயே மிக முக்கியமான நபரைப் பற்றிய நிஜமான, காணக்கூடிய அத்தாட்சிதான்” இந்த எலும்பு பெட்டி என இப்பத்திரிகையின் பதிப்பாசிரியர் ஹெர்ஷெல் ஷாங்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இருந்தாலும், அந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள வாசிக்கத்தக்க அம்மூன்று பெயர்களும் முதல் நூற்றாண்டில் மிகவும் சகஜமானவை. ஆகவே, இயேசு கிறிஸ்துவின் குடும்பம் அல்லாமல், யாக்கோபு, யோசேப்பு, இயேசு என்ற பெயர்களில் நபர்களைக் கொண்ட வேறொரு குடும்பம் இருந்திருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. “கி.பி. 70-⁠க்கு முன்பு எருசலேமில் வாழ்ந்த இரண்டு தலைமுறையினரில், . . . ‘யோசேப்பின் குமாரனும், இயேசுவின் சகோதரனுமாகிய யாக்கோபு’ என அழைக்கப்படுகிறவர்கள் ஒருவேளை சுமார் 20 பேர் இருந்திருக்கலாம்” என லெமர் குறிப்பிடுகிறார். என்றபோதிலும், இந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள யாக்கோபு என்ற பெயர் இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாகிய யாக்கோபுதான் என்பதற்கு 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக அவர் கருதுகிறார்.

இதிலுள்ள எழுத்துப் பொறிப்புகள் இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாகிய யாக்கோபையே குறிக்கிறது என்பதை சிலர் நம்புவதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. இறந்துபோனவருடைய தகப்பனார் பெயரை சேர்த்து குறிப்பிடுவது சாதாரண பழக்கமாக இருந்தாலும், ஒரு சகோதரனுடைய பெயரை சேர்த்து குறிப்பிடுவது அபூர்வமே. ஆகவே, இந்த இயேசு முக்கியமான ஒருவராக இருக்க வேண்டும் என்றும், இவர் கிறிஸ்தவத்தின் ஸ்தாபகராகிய இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் சிலர் நம்புகின்றனர்.

எலும்பு பெட்டி என்பது; கல்லறையில் வைக்கப்பட்ட உடல் அழுகியப் பிறகு இறந்தவருடைய எலும்புகளைப் போட்டு வைக்கும் பெட்டி அல்லது பேழைதான் அது. எருசலேமைச் சுற்றிலுமிருந்த கல்லறைகளிலிருந்து இந்தப் பெட்டிகளில் பல கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. யாக்கோபின் பெயர் பொறிக்கப்பட்ட இந்தப் பெட்டி பண்டைக்கால பொருட்கள் கிடைக்கும் சந்தையிலிருந்து பெறப்பட்டது, அதிகாரப்பூர்வமான அகழாய்வு இடத்திலிருந்து அல்ல. இப்பண்டைய பொருளை அதன் சொந்தக்காரர் 1970-களில் சில டாலருக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்தப் பெட்டி எப்படி வந்தது என்பது ஒரு மர்மமாக இருக்கிறது. “ஒரு பண்டைக்கால பொருள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது என்பதையும், சுமார் 2,000 ஆண்டுகளாக எங்கிருந்தது என்பதையும் உங்களால் சொல்ல முடியாவிட்டால், அந்தப் பொருளுக்கும் அது குறிப்பிடும் ஆட்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி உங்களால் ஊகிக்க முடியாது” என நியு யார்க்கின் பார்ட் கல்லூரி பேராசிரியர் புரூஸ் சில்டன் கூறுகிறார்.

தொல்லியல் பின்னணி இல்லாததை ஈடுகட்டுவதற்கு, இஸ்ரேலின் நிலவியல் அளவைத் துறைக்கு (Geological Survey of Israel) அந்தப் பெட்டியை ஆன்ட்ரே லெமர் அனுப்பினார். அந்தப் பெட்டி கி.பி. முதல் நூற்றாண்டில் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சுண்ணாம்புக் கல்லால் தயாரிக்கப்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். “நவீன கருவிகளோ பொருட்களோ பயன்படுத்தப்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை” என்று கூறினர். இருந்தாலும், “அது இயேசுதான் என்பதற்கு சூழ்நிலைச் சான்று பலமாக இருக்கிறது, என்றாலும் அது சூழ்நிலைச் சான்றுதான்” என நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த வேத கல்விமான்கள் கருத்துத் தெரிவித்தனர்.

“படித்த எவருமே இயேசு வாழ்ந்தார் என்பதைக் குறித்து இன்று சந்தேகப்பட மாட்டார்கள்” என டைம் பத்திரிகை குறிப்பிட்டது. என்றாலும், இயேசு வாழ்ந்தார் என்பதற்கு பரிசுத்த வேதாகமத்தைத் தவிர வேறு அத்தாட்சியும் வேண்டும் என பலர் நினைக்கின்றனர். இயேசு கிறிஸ்துவை நம்புவதற்கு தொல்லியல் ஆதாரம் அவசியமா? 

வெள்ளி, 14 ஜூலை, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 8

பீம் என்றால் என்ன?



“பீம்” என்ற வார்த்தை வேதாகமத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. சவுல் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய உலோக ஆயுதங்களைத் தீட்டுவதற்கு பெலிஸ்த கொல்லர்களிடம் போக வேண்டியிருந்தது. “தீட்டுவதற்கான கூலி, கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எட்டு கிராம் அளவுள்ள நாணயம் [பீம்] ஆகும்” என்பதாகப் வேதாகமம் குறிப்பிடுகிறது. (⁠1 சாமுவேல் 13:21).

பீம் என்றால் என்னவென்பது கி.பி. 1907 வரை ஒரு புதிராக இருந்தது; அவ்வருடத்தில்தான் முதன்முதலாக பீம் எடைக்கல் பூர்வ பட்டணமாகிய கேசேரிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. “பீம்” என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது ஆரம்ப கால வேதாகம மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கடினமாக இருந்தது. உதாரணமாக, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு 1 சாமுவேல் 13:21-ஐ இவ்விதமாக மொழிபெயர்க்கிறது: “கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.”

பீம் என்பது சராசரியாக 7.82 கிராமுக்குச் சமமான எடை அல்லது எபிரெயர்களின் அடிப்படை அலகான ஒரு சேக்கலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்குச் சமமான எடை என இன்றைய அறிஞர்கள் அறிந்திருக்கின்றனர். இஸ்ரவேலரின் ஆயுதங்களை கூர்மையாக்குவதற்கு பீம் அளவு வெள்ளித் துண்டுகளையே பெலிஸ்தர் கூலியாக வசூலித்தனர். யூத ராஜ்யமும் அதன் தலைநகரான எருசலேமும் கி.மு. 607-⁠ல் வீழ்ச்சியடைந்த பிறகு சேக்கல் எடை புழக்கத்திலிருந்து மறைந்தது. எபிரெய வேதாகமத்தின் சரித்திர மெய்மைக்கு பீம் எவ்வாறு சான்றளிக்கிறது என்பதனை இனி விழிப்போம்,

ஒன்று சாமுவேல் புத்தகம் உட்பட எபிரெய வேதாகம புத்தகங்கள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியில்தான், அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து முதல் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில்தான் எழுதப்பட்டதாக சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள். ஆகையால், “இந்தப் புத்தகங்கள் எல்லாம் . . . ‘சரித்திர ஆதாரமற்றவை,’ இவற்றிலிருந்து ‘வேதாகமம் குறிப்பிடும் இஸ்ரவேலைப்’ பற்றியோ, ‘பூர்வ இஸ்ரவேலை’ பற்றியோ உண்மையான சரித்திரப்பூர்வ தகவல்களைப் பெற முடியாது. ஏனெனில் இவை எல்லாம் யூத, கிறிஸ்தவ இலக்கிய கண்டுபிடிப்புகள் மட்டுமே” என்கிறார்கள்.

ஆனால், 1 சாமுவேல் 13:21-⁠ல் சொல்லப்பட்டுள்ள பீம் அளவை பற்றி, மத்திய கிழக்கு தொல்பொருள் மற்றும் மானிடவியல் பேராசிரியரான வில்லியம் ஜி. டேவர் இவ்வாறு கூறுகிறார்: “இந்த எடை அளவுகள் கிரேக்க-ரோம காலப்பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர்களின் ‘கற்பனையில் உருவாகியிருக்க’ முடியாது. ஏனெனில் அந்தக் காலப்பகுதிக்குள் இந்த எடைகள் எல்லாம் மறக்கப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருந்தன. உண்மையில், 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பீம் என்ற எபிரெய வார்த்தை பொறிக்கப்பட்ட எடைகள் அகழ்வாராய்ச்சியில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படும் வரை... வேதாகம வசனத்தின் இச்சிறு பகுதி... புரியாப் புதிராகவே இருந்தது. வேதாகம கதைகள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியின் ‘இலக்கிய கண்டுபிடிப்புகளாக’ இருந்தால், இந்தக் குறிப்பிட்ட கதை எபிரெய வேதாகமத்தில் எவ்வாறு இடம்பெற்றது? பீம் பற்றிய வசனம் ‘ஒரு சிறு நுட்பவிவரம் மட்டுமே’ என ஒருவர் வாதிடலாம். அது உண்மைதான். ஆனால் சிறு நுட்பவிவரங்களின் தொகுப்புதான் ‘சரித்திரம் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே.’

(பீம் எடை அளவு, ஒரு சேக்கலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமம்)

ஞாயிறு, 9 ஜூலை, 2017

காலை ஜெபங்களினுடைய மிகுந்த முக்கியத்துவங்கள் என்ன?



👤 ஏன் நீங்கள் காலையில் ஜெபிக்க வேண்டும் ⁉⁉⁉

🛐 காலை ஜெபங்களினுடைய மிகுந்த முக்கியத்துவங்கள் என்ன?

👉 காலையில் ஜெபிப்பது மிக முக்கியம் ஏனெனில் பிசாசை சந்திப்பதற்கு முன்னதாக,நீங்கள் தேவனை சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் ஜீவியத்தின் சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கு முன்னதாக, தேவனைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் அநேக ஜனங்களோடு பேசுவதற்கு முன்னதாக, தேவனிடம் பேசுகிறவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் மற்ற ஜனங்களுடன் ஐக்கியம் கொள்வதற்கு முன்னதாக, தேவனுடன் ஐக்கியம் கொள்பவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் எந்தத் தலைப்புச் செய்திகளைக் கேட்பதற்கு முன்னதாக, பரலோகத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்பவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக அமருவதற்கு முன்னதாக,தேவன் முன் அமருகிறவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் மனிதர்கள் முன் மண்டியிடுவதற்கு முன்னதாக,தேவன் முன் மண்டியிடுகிறவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் ஜனங்களைக் கனப்படுத்துவதற்கு முன்னதாக, தேவனைக் கனப்படுத்துகிறவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் ஜனங்கள் மத்தியில் செல்வதற்கு முன்னதாக,அவரது பிரசன்னத்திற்குள்ளாக செல்கிறவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் உங்கள் சரீரத்திற்கு உணவளிப்பதற்கு முன்னதாக,உங்கள் ஆவிக்கு உணவளிப்பவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் மற்ற சிறிய நாமங்களை அழைப்பதற்கு முன்னதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என்று அழைப்பவர்களாக இருப்பீர்கள்.

👉 நீங்கள் உங்களையே கண்ணாடியில் பார்ப்பதற்கு முன்னதாக, நம்மைப் படைத்தவரைப் பார்ப்பவர்களாக இருப்பீர்கள்.

(தொகுத்தளித்தவருக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன் ~ ஸ்ரீதரன்).