வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஆ



☞ ஆசியா : கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின்படி, இன்றைய துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியையும், சாமு, பத்மு போன்ற சில கடலோரத் தீவுகளையும் உள்ளடக்கிய ரோம மாகாணம். இதன் தலைநகரம் எபேசு. (அப் 20:16; வெளி 1:4).

☞ ஆதார் : பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 12-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 6-ஆம் மாதம். இது பிப்ரவரி பாதியில் ஆரம்பித்து மார்ச் பாதியில் முடிவடைந்தது. (எஸ்தர் 3:7).

☞ ஆப் : பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 5-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 11-ஆம் மாதம். இது ஜூலை பாதியில் ஆரம்பித்து ஆகஸ்ட் பாதியில் முடிவடைந்தது. பைபிளில் இதன் பெயர் குறிப்பிடப்படவில்லை; வெறுமனே “ஐந்தாம் மாதம்” என்று சொல்லப்பட்டுள்ளது. (எண் 33:38; எஸ்றா 7:9).

☞ ஆபிப் : யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி முதலாம் மாதத்துக்கும், அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 7-ஆம் மாதத்துக்கும் ஆரம்பத்தில் இருந்த பெயர். ஆபிப் என்பதற்கு “பச்சைக் கதிர்கள்” என்று அர்த்தம். இது மார்ச் பாதியில் ஆரம்பித்து ஏப்ரல் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிய பின்பு இது நிசான் என்று அழைக்கப்பட்டது. (உபா 16:1).

☞ ஆமென் : “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாக நடக்கட்டும்” என்று அர்த்தம். “உண்மையாக, நம்பகமாக இருப்பது” என்ற அர்த்தத்தைத் தருகிற ஆமன் என்ற எபிரெய மூல வார்த்தையிலிருந்து இது வந்திருக்கிறது. ஓர் உறுதிமொழியையோ ஒரு ஜெபத்தையோ ஒரு வாக்கியத்தையோ ஆமோதிக்கும்போது, “ஆமென்” என்று சொல்லப்பட்டது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் “ஆமென்” இயேசு கிறிஸ்துவின் நாமம் என்றும் கூறுகின்றது. (உபா 27:26; 1நா 16:36; வெளி 3:14).

☞ ஆயத்த நாள் : ஓய்வுநாளுக்கு முந்தின நாள். இந்த நாளில்தான் ஓய்வுநாளுக்குத் தேவையான ஏற்பாடுகளை யூதர்கள் செய்தார்கள். இப்போது வெள்ளிக்கிழமை என்று அழைக்கப்படுகிற நாளின் சூரிய அஸ்தமனத்தோடு இந்த நாள் முடிவுக்கு வந்தது; பின்பு ஓய்வுநாள் ஆரம்பமானது. யூதர்களுக்கு ஒரு நாள் என்பது, ஒரு சாயங்காலத்தில் ஆரம்பித்து அடுத்த சாயங்காலத்தில் முடிந்தது. (மாற் 15:42; லூ 23:54).

☞ ஆராதனை மேடு : பொதுவாக மலை உச்சியிலோ குன்றின் உச்சியிலோ இருந்த வழிபாட்டு இடம் அல்லது மனிதர்களால் அமைக்கப்பட்ட மேடை. உண்மைக் கடவுளை வழிபடுவதற்காகச் சில சமயங்களில் இது பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பொய் தெய்வங்களை வழிபடுவதற்காகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. (எண் 33:52; 1 ராஜாக்கள் 3:2; எரே 19:5).

☞ ஆல்பா, ஒமேகா.
கிரேக்க எழுத்துக்களில், முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா. இவை இரண்டும் ஒன்றுசேர்ந்து வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் நாமமாக மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆல்பா, ஒமேகா என்ற வார்த்தைகளுக்கும், “முதலும் கடைசியும்,” ‘ஆரம்பமும் முடிவும்’ என்ற வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். (வெளி 1:8; 21:6; 22:13).

☞ ஆலய அர்ப்பணப் பண்டிகை : அந்தியோக்கஸ் எப்பிபானஸ் என்பவனால் தீட்டாக்கப்பட்ட ஆலயம் பிற்பாடு சுத்தப்படுத்தப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு வருஷமும் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிஸ்லே மாதம் 25-ஆம் தேதி ஆரம்பித்து மொத்தம் 8 நாட்களுக்கு இது கொண்டாடப்பட்டது. (யோவா 10:22).

☞ ஆலயம் : இடம்விட்டு இடம் மாற்றப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பதிலாக, எருசலேமில் கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடம். இஸ்ரவேலர்களுடைய வழிபாட்டின் மைய இடமாக இது இருந்தது. முதல் ஆலயத்தை சாலொமோன் கட்டினார், அது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு, இரண்டாவது ஆலயத்தை செருபாபேல் கட்டினார். பின்பு, மகா ஏரோது அதை மறுபடியும் கட்டினான். வேதாகமம் இதை ‘கர்த்தருடைய வீடு’ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறது. (யாத் 23:19; 34:26; 1ரா 6:1) ஆலயம் என்ற வார்த்தை, பிதா குடியிருக்கிற பரலோகத்தையும் குறிக்கிறது. (யாத் 25:8, 9; 2ரா 10:25; 1நா 28:10; வெளி 11:19).

☞ ஆவிகளோடு பேசுகிறவர்.
இறந்தவர்களோடு பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் நபர். (லேவி 20:27; உபா 18:10-12; 2ரா 21:6).

☞ ஆவியுலகத் தொடர்பு : உயிரோடு இருக்கிறவர்களிடம் செத்தவர்களின் ஆவியால் பேச முடியும் என்ற நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட பழக்கம். ஒருவர் சாகும்போது, உடல் அழிந்தாலும் அவருடைய ஆவி அழிவதில்லை என்றும், அது தன் பிடியில் சிக்கிய ஆட்களைப் பயன்படுத்தி மற்ற மனிதர்களோடு பேசுகிறது என்றும் நம்பப்படுகிறது. “ஆவியுலகத் தொடர்புகொள்வது” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஃபார்மக்கியா. “போதைப்பொருளைப் பயன்படுத்துவது” என்பது இதன் நேரடி அர்த்தம். பழங்காலத்தில், பில்லிசூனியம் செய்வதற்காகப் பேய்களிடம் சக்தியைக் கேட்கும்போது போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால், இந்த வார்த்தை, காலப்போக்கில் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டது. (கலா 5:20; வெளி 21:8).

☞ ஆழம் : தண்ணீரின் ஆழத்தை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவு. ஓர் ஆழம் என்பது 6 அடிக்குச் சமம். (அப் 27:28).

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ அ



☞ அகாயா - கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின்படி, கிரேக்கு தேசத்தின் தென் பகுதியில் இருந்த ரோம மாகாணம். இதன் தலைநகரம் கொரிந்து. பிலபனிஸ் தீபகற்பம் முழுவதும் கிரேக்கு தேசத்தின் மத்திய பகுதி முழுவதும் இதில் அடங்கும். (அப் 18:12).

☞ அசைவாட்டும் காணிக்கை - காணிக்கை வைத்திருப்பவரின் கைகளுக்குக் கீழே குரு தன்னுடைய கைகளை வைத்து, அவருடைய கைகளை முன்னும் பின்னும் ஆட்டுவார். அல்லது குருவே தன்னுடைய கைகளில் அந்தக் காணிக்கையை வைத்து முன்னும் பின்னும் ஆட்டுவார். இப்படிச் செய்வது, கர்த்தரிடம் அந்தக் காணிக்கையைக் கொடுப்பதற்கு அடையாளமாக இருந்தது. (லேவி 7:30).

☞ அண்ணகர் - ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதுதான் இதன் நேரடி அர்த்தம். பெரும்பாலும், அரண்மனைகளில் ராணிக்கும் மறுமனைவிகளுக்கும் பாதுகாவலர்களாகவோ பணியாளர்களாகவோ இப்படிப்பட்ட ஆண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆண்மை நீக்கம் செய்யப்படாத அரசவை அதிகாரிகளைக் குறிப்பதற்கும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுளுடைய சேவையை முழு மூச்சோடு செய்வதற்காகச் சுயக்கட்டுப்பாட்டோடு இருப்பவரை, பரலோக ‘ராஜ்ஜியத்துக்காக அண்ணகராய்’ இருப்பவர் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. (மத் 19:12, எஸ்தர் 2:3, அப் 8:27).

☞ அதலபாதாளம் - இதற்கான கிரேக்க வார்த்தை அபிஸோஸ். “படு ஆழமான,” “ஆழம் காண முடியாத” அல்லது “அளவிட முடியாத” என்பதுதான் இதன் அர்த்தம். அடைத்து வைக்க பயன்படுத்தப்படுகிற ஓர் இடத்தை அல்லது அடைத்து வைக்கப்பட்ட ஒரு நிலையைக் குறிப்பிட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கல்லறையையும் குறிக்கும். இதைத் தவிர வேறு சிலவற்றையும் குறிக்கும். (லூக் 8:31; ரோ 10:7; வெளி 20:3).

☞ அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம் - தலைமைக் குருவுடைய தலைப்பாகையின் முன்பகுதியில் கட்டப்பட்ட பளபளப்பான தகடு. இது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. இதில், “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்று எபிரெயுவில் பொறிக்கப்பட்டிருந்தது. (யாத் 39:30).

☞ அரமேயிக் - இந்த மொழி எபிரெய மொழியோடு நெருங்கிய தொடர்புடையது, இதை எழுதுவதற்கு எபிரெய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரம்பத்தில் அரமேயர்களால் பேசப்பட்டு வந்தது. காலப்போக்கில் அசீரியா மற்றும் பாபிலோன் சாம்ராஜ்யங்களில் வர்த்தகத்துக்கும் தகவல்தொடர்புக்கும் பயன்படுத்தப்பட்ட சர்வதேச மொழியாக ஆனது. பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இது இருந்தது. (எஸ்றா 4:7) எஸ்றா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் சில பகுதிகள் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன. (எஸ்றா 4:8–6:18; 7:12-26; எரே 10:11; தானி 2:4).

☞ அராம் - அரமேயர்கள்.
இவர்கள் சேமின் மகனாகிய அராமின் வம்சத்தில் வந்தவர்கள். லீபனோன் மலைகளிலிருந்து மெசொப்பொத்தாமியா வரையுள்ள பகுதிகளிலும், வடக்கே டாரஸ் மலைகளிலிருந்து தெற்கே தமஸ்கு வரையிலும் அதற்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எபிரெய மொழியில் அராம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பிற்பாடு சீரியா என்று அழைக்கப்பட்டது. அதில் குடியிருந்தவர்கள் சீரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதி 25:20; உபா 26:5; ஓசி 12:12).

☞ அரியோபாகு - அத்தேனே நகரத்தில், அக்ரோபாலிசின் வட மேற்குப் பகுதியிலுள்ள உயரமான குன்று அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. இங்கே கூட்டங்கள் நடத்திய ஒரு சங்கமும் (நீதிமன்றமும்) அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. பவுலின் மத நம்பிக்கைகளைப் பற்றிக் கேட்பதற்காக தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்களும் எப்பிக்கூரர்களும் அவரை இங்கே கூட்டிக்கொண்டு வந்தார்கள். (அப் 17:19).

☞ அல்மோத் - இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. இதற்கு “கன்னிப்பெண்கள், இளம் பெண்கள்” என்று அர்த்தம். இளம் பெண்களின் உச்சக்குரலை இது குறிக்கலாம். இசையை அல்லது பக்கவாத்தியத்தை உயர் சுருதியில் வாசிக்க வேண்டும் என்பதைக் குறிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. (1நா 15:20; சங் 46-ன் மேல்குறிப்பு).

☞ அளவுகோல் - பொதுவாக இந்த அளவுகோல் நாணற்தண்டிலிருந்து செய்யப்பட்டது. இதன் நீளம் 6 முழம். சிறிய முழத்தின்படி, 2.67 மீட்டர் (8.75 அடி). பெரிய முழத்தின்படி, 3.11 மீட்டர் (10.2 அடி). (எசே 40:3, 5; வெளி 11:1).

☞ அஸ்தரோத் - போர் மற்றும் கருவளத்திற்கான கானானியப் பெண் தெய்வம். பாகாலின் மனைவி. (1 சாமு 7:3).