பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 7
சமாரிய மண் ஓடுகள்
கி.மு. 740-ல் சமாரியாவை அசீரியர்கள் வீழ்த்தும்வரை, இது இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகராய் இருந்தது. சமாரியா உருவான விதத்தை 1 இராஜாக்கள் 16:23, 24 பின்வருமாறு குறிப்பிடுகிறது: “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில் [கி.மு. 947], உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி,... சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு... சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.” ரோமர்களின் ஆட்சிக் காலம்வரை அந்த நகரம் நிலைத்திருந்தது; அப்போது அதன் பெயர் சபாஸ்டி என்று மாற்றப்பட்டது. கடைசியில், கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அது அடியோடு அழிந்தது.
1910-ஆம் ஆண்டு, தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தும் ஒரு குழுவினர், பண்டைய சமாரியா இருந்த இடத்தைத் தோண்டியபோது நிறைய மண் ஓடுகளைக் கண்டுபிடித்தார்கள். இவை கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையென அவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். சமாரியாவின் சுற்றுவட்டாரங்களிலிருந்து எண்ணெய், திராட்சை ரசம் ஆகியவை அங்கு கொண்டுவரப்பட்டதாக அந்த ஓடுகளில் காணப்பட்ட வாசகங்கள் தெரிவிக்கின்றன. பூர்வ எழுத்துப்பொறிப்புகள் - வேதாகம காலத்தைப் பறைசாற்றும் குரல்கள் என்ற ஆங்கில புத்தகம் இந்தக் கண்டுபிடிப்பைக் குறித்துப் பின்வருமாறு சொல்கிறது: “1910-ல் கண்டுபிடிக்கப்பட்ட 63 மண் ஓடுகள்... பூர்வ இஸ்ரவேலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப்பொறிப்புகளில் மிக முக்கியமானவையாய்க் கருதப்படுவது சரியானதே. இந்த ஓடுகளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் முக்கியமாய் இருப்பதால் அல்ல.... மாறாக, இஸ்ரவேலரின் பெயர்கள், வம்சங்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் ஆகியவை எக்கச்சக்கமாகக் காணப்பட்டதே இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம்.” வேதாகமத்திலுள்ள தகவல்களை இவை ஊர்ஜிதப்படுத்துவதை காண்போம்.
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றிய பிறகு, அதைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். மனாசே கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்ட பிராந்தியத்தில் சமாரியா அமைந்திருந்தது. யோசுவா 17:1-6-ன்படி, மனாசேயின் பேரனான கிலெயாத்தின் வழிவந்த பத்து வம்சங்களுக்கு இந்தப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. கிலெயாத்தின் மகன்களான அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், செகேம், செமீதா ஆகியோருக்கு அங்கே இடம் ஒதுக்கப்பட்டது. ஆறாவது நபரான எப்பேருக்கு, பேரன்கள் இல்லாததால் அவருடைய ஐந்து பேத்திகளான மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியோருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.-எண்ணாகமம் 27:1-7.
இவற்றில் ஏழு குடும்பங்களின் பெயர்களை சமாரிய மண் ஓடுகளில் காணமுடிகிறது. கிலெயாத்தின் மகன்கள் ஐந்து பேரின் பெயர்களும், எப்பேரின் பேத்திகளான ஒக்லாள், நோவாள் ஆகியோரின் பெயர்களும் இவற்றில் காணப்படுகின்றன. “சமாரிய மண் ஓடுகளில் உள்ள பெயர்களை வைத்து மனாசே கோத்திரத்தில் வந்த வம்சத்தாருக்கும், அவர்கள் குடியிருந்ததாய் வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிற இடங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பரிசுத்த வேதாகமம் தவிர இதை விளக்குகிற மற்றொரு அத்தாட்சி இதுவாகும்” என்று NIV ஆர்க்கியலாஜிக்கல் ஸ்டடி பைபிள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் தெரிவிக்கிறது. இஸ்ரவேல் கோத்திரங்களின் ஆரம்ப கால சரித்திரத்தை விளக்கும் வேதாகம பதிவு நம்பகமானது என்பது இந்த மண் ஓடுகளிலிருந்து தெளிவாகிறது.
இஸ்ரவேலரின் மத சூழல்பற்றி பரிசுத்த வேதம் தரும் தகவல்களையும் சமாரிய மண் ஓடுகள் நிரூபிப்பதாகத் தெரிகிறது. இவை எழுதப்பட்ட சமயத்தில், கர்த்தரின் வழிபாட்டை கானானிய தெய்வமான பாகாலின் வழிபாட்டோடு சம்பந்தப்படுத்தியிருந்தார்கள். கி.மு. எட்டாம் நூற்றாண்டில், எழுதப்பட்ட ஓசியா தீர்க்கதரிசனமும் இஸ்ரவேலர் மனந்திரும்பும் காலத்தைப்பற்றி முன்னுரைத்தது. அப்போது, கர்த்தரை இஸ்ரவேலர் “ஈஷி,” அதாவது, என் கணவர் என்று அழைப்பார்கள் என்றும் இனிமேலும், “பாகாலி” அதாவது, என் உரிமையாளர் என அழைக்க மாட்டார்கள் என்றும் முன்னுரைத்தது. (ஓசியா 2:16, 17) சமாரிய மண் ஓடுகளில் காணப்பட்ட சிலருடைய பெயர்கள் “பாகால் என் தகப்பன்,” “பாகால் பாடுகிறான்,” “பாகால் பலசாலி,” “பாகால் நினைந்தருளுகிறான்” போன்ற அர்த்தங்களைத் தந்தன. ஏதோவொரு விதத்தில் கர்த்தரின் பெயர் இணைக்கப்பட்ட 11 பெயர்கள் காணப்பட்டால், 7 பெயர்கள் ‘பாகாலின்’ பெயரை உடையதாய் இருந்தன.




