பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 5
எருசலேமைக் குறித்து இயேசுவின் தீர்க்கதரிசனம்;
1970-ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழு, எருசலேமில் தோண்டியபோது தீயில் கருகிய, இடிந்துபோன ஒரு கட்டடத்தைக் கண்டுபிடித்தது. “ஆராய்ச்சி செய்து பழக்கப்பட்ட கண்களுக்கு அங்கு என்ன சம்பவித்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது.... அந்தக் கட்டடம் தீக்கிரையாகியிருந்தது, சுவர்களும் உட்கூரையும் நொறுங்கி விழுந்திருந்தன” என்று அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான நமான் ஆவீகாட் எழுதினார். படிக்கட்டைப் பிடிப்பதற்கு விரல்களை நீட்டிய நிலையில் இருந்த கை ஒன்றின் எலும்புகள் ஓர் அறையில் கிடந்தன.
தரை முழுவதும் நாணயங்கள் சிதறிக்கிடந்தன; அவற்றில், கி.பி. 69-ஐச் சேர்ந்த நாணயங்களும் அதற்கு முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்தவையும் இருந்தன; கி.பி. 69-க்குப்பின் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் எதுவும் காணப்படவில்லை. இதுவே ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்த நான்காவது வருடமாகும். கட்டடம் நொறுங்கி விழுவதற்கு முன்பாக பொருள்கள் நாலாபுறமும் இறைக்கப்பட்டிருந்தன. “இதைப் பார்த்தபோது, பட்டணத்தைக் கைப்பற்றிய பிறகு ரோம படைவீரர்கள் வீடுகளைச் சூறையாடியதைப்பற்றி ஜொஸிஃபஸ் விவரித்தது எங்கள் நினைவுக்கு வந்தது” என்று ஆவீகாட் சொன்னார். கி.பி. 70-ல் ரோமர்கள் எருசலேம் நகரத்தை அழித்து, அதிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்தார்களென சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அந்த எலும்புகள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணினுடையது என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. “கருகிக்கிடந்த அந்த வீட்டின் சமையலறையில் இருந்த அந்த இளம் பெண், ரோமர்கள் தாக்கியபோது மூண்ட தீயில் சிக்கிக்கொண்டாள்; தரையில் தடுமாறி விழுந்தவள் கதவருகே இருந்த படியைப் பிடிப்பதற்கு முயன்று கொண்டிருந்தபோது இறந்துவிட்டாள். நெருப்பு மளமளவென பரவியதால்... தப்பிக்க முடியாமல் இடிபாடுகளில் புதையுண்டாள்” என்று பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகை சொல்கிறது.
இந்தக் காட்சி, எருசலேமைக் குறித்து இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது; இப்படிச் சம்பவிப்பதற்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அவர் இவ்வாறு சொன்னார்: “உன் சத்துருக்கள்... உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்[வார்கள்].” (லூக்கா 19:43,44).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக