பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தி
☞ திராக்மா:
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது 3.4 கிராம் எடையுள்ள கிரேக்க வெள்ளிக் காசைக் குறிக்கிறது. எபிரெய வேதாகமத்தில், பெர்சியர்களின் காலப்பகுதியைச் சேர்ந்த தங்க திராக்மாவைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது; இந்த திராக்மா, தாரிக் காசு என்று கருதப்படுகிறது. (நெகே 7:70, மத் 17:24).
☞ திராட்சமது காணிக்கை:
பலிபீடத்தின்மீது காணிக்கையாக ஊற்றப்பட்ட திராட்சமது. பெரும்பாலான மற்ற பலிகளோடு சேர்த்து இது கொடுக்கப்பட்டது. சக கிறிஸ்தவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராய் இருப்பதைத் தெரியப்படுத்த பவுல் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். (எண் 15:5, 7; பிலி 2:17).
☞ திராட்சரச ஆலை:
பொதுவாக, சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட இரண்டு தொட்டிகளைக் குறிக்கிறது. ஒரு தொட்டி இன்னொன்றைவிட உயரத்தில் இருந்தது. இவை இரண்டும் ஒரு சிறிய கால்வாய் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. மேலே இருந்த தொட்டியில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டபோது, கீழே இருந்த தொட்டியில் திராட்சரசம் நிரம்பியது. கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஏசா 5:2; வெளி 19:15).
☞ திரி வெட்டும் கருவிகள்:
இந்தக் கருவிகள் வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்டன. இவை தங்கம் அல்லது செம்பால் செய்யப்பட்டிருந்தன. விளக்குத் திரிகளை வெட்டுவதற்கான இந்தக் கருவிகள் பார்ப்பதற்குக் கத்தரிக்கோல் போல இருந்திருக்கலாம். (2 இரா 25:14).
☞ திரிகைக் கல்:
ஒரு வட்ட வடிவ கல்மீது வைக்கப்பட்ட இன்னொரு வட்ட வடிவ கல்; தானியங்களை அரைக்க இது பயன்படுத்தப்பட்டது. மேற்கல்லை சுழற்றுவதற்காக, அடிக்கல்லின் நடுவில் ஒரு முளை பொருத்தப்பட்டிருந்தது. பைபிள் காலங்களில், கையினால் சுற்றப்பட்ட திரிகைக் கல் பெரும்பாலான வீடுகளில் இருந்தது, பெண்கள் இதைப் பயன்படுத்தினார்கள். அன்றாட உணவான ரொட்டியைத் தயாரிக்க இது கட்டாயம் தேவைப்பட்டதால், திரிகையின் அடிக்கல்லையோ அதன் மேற்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது என்ற கட்டளை திருச்சட்டத்தில் இருந்தது. பெரிய திரிகைக் கல் விலங்குகளை வைத்து இயக்கப்பட்டது. (உபா 24:6, மாற் 9:42).
☞ திருச்சட்டம்:
கி.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்தில் இருந்தபோது மோசே மூலமாக கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த முழு சட்டத் தொகுப்பை அல்லது பைபிளின் முதல் 5 புத்தகங்களைக் குறிக்கிறது. (யோசு 23:6; லூ 24:44; மத் 7:12; கலா 3:24) சில சமயங்களில், ‘சட்டம்’ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிற வசனங்களில், அது திருச்சட்டத்திலுள்ள ஒரு தனி சட்டத்தை அல்லது ஒரு சட்டத்திலுள்ள நியமத்தை அர்த்தப்படுத்தலாம். (எண் 15:16; உபா 4:8).
☞ திரைச்சீலை:
வழிபாட்டுக் கூடாரத்திலும் சரி, ஆலயத்திலும் சரி, பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் நடுவில் போடப்பட்டிருந்த துணி; இது அழகாக நெய்யப்பட்டிருந்தது; இதில் கேருபீன் வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. (யாத் 26:31; 2 நாளா 3:14; மத் 27:51; எபி 9:3).
☞ தினாரியு:
சுமார் 3.85 கிராம் எடையுள்ள ரோம வெள்ளிக் காசு. இதன் ஒரு பக்கத்தில் ரோம அரசனுடைய உருவம் இருந்தது. இது ஒரு கூலியாளின் தினக் கூலியாக இருந்தது. யூதர்களிடமிருந்து ‘தலைவரியாக’ ரோமர்களால் வசூலிக்கப்பட்டது. (மத் 22:17, லூக் 20:24).
☞ திஷ்ரி/ஏத்தானீம்:
யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 7-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி முதல் மாதம். இது செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, இது திஷ்ரி என்று அழைக்கப்பட்டது. (1 இரா 8:2).



