பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ த
☞ தகன பலி:
கடவுளுக்கு முழுமையான காணிக்கையாகப் பலிபீடத்தின்மீது எரிக்கப்பட்ட மிருக பலி. காளை, ஆடு, வெள்ளாடு, புறா, புறாக்குஞ்சு ஆகியவற்றைத் தகன பலியாகக் கொடுத்தவர் அவற்றின் எந்தப் பாகத்தையும் தனக்காக எடுத்துக்கொள்ளவில்லை. (யாத் 29:18; லேவி 6:9).
☞ தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள்:
இவர்கள் கிரேக்க தத்துவ ஞானியான எப்பிக்கூரசை (கி.மு. 341-270) பின்பற்றியவர்கள். இன்பம்தான் வாழ்க்கையின் லட்சியம் என்ற கருத்து இவர்களுடைய தத்துவத்துக்கு அடிப்படையாக இருந்தது. (அப் 17:18).
☞ தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்கள்:
கிரேக்க தத்துவ ஞானிகளில் ஒரு பிரிவினர். பகுத்தறிவோடு நடந்துகொள்ளும்போதும், இயற்கையோடு ஒன்றி வாழும்போதும் சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினார்கள். இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாத நபர்தான் உண்மையான ஞானி என்றும் நம்பினார்கள். (அப் 17:18).
☞ தம்மூஸ்(1):
எருசலேமில் இருந்த விசுவாசதுரோக எபிரெயப் பெண்கள் இந்தத் தெய்வத்துக்காக அழுதார்கள். தம்மூஸ் என்பது உண்மையில் ஒரு ராஜா என்றும், அவன் இறந்ததுக்குப் பின்பு தெய்வமாக வணங்கப்பட்டான் என்றும் சொல்லப்படுகிறது. சுமேரிய எழுத்துக்களில், தம்மூஸ் என்பது டுமுசீ என்று அழைக்கப்படுகிறது. இது, கருவள தெய்வமான இனென்னாவின் (பாபிலோனிய இஷ்டாரின்) காதலன் அல்லது துணை என்று சொல்லப்படுகிறது. (எசே 8:14).
☞ தம்மூஸ்(2) பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 4-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 10-ஆம் மாதம். இது ஜூன் பாதியில் ஆரம்பித்து ஜூலை பாதியில் முடிவடைந்தது.
☞ தர்ஷீஸ் கப்பல்கள்:
பண்டைய தர்ஷீசுக்கு (தற்போதைய ஸ்பெயின்) போய் வந்த கப்பல்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். காலப்போக்கில், நீண்ட தூரம் பயணம் செய்த பெரிய கப்பல்கள் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டன. வியாபாரத்துக்காக சாலொமோனும் யோசபாத்தும் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள். (1 இரா 9:26; 10:22; 22:48).
☞ தலைப்பாகை:
தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் துணி. உயர்தர நாரிழையால் செய்யப்பட்ட தலைப்பாகையை தலைமைக் குரு கட்டியிருந்தார். நீல நிற நாடாவால் ஒரு தங்கத்தகடு அதன் முன்பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. ராஜாக்கள் தங்களுடைய கிரீடத்துக்குக் கீழே தலைப்பாகையைக் கட்டியிருந்தார்கள். நியாயம் தனக்குத் தலைப்பாகை போல இருப்பதாக யோபு சொன்னார். (யாத் 28:36, 37; யோபு 29:14; எசே 21:26).
☞ தலைமைக் குரு:
திருச்சட்டத்தின்படி, கடவுளுக்குமுன் மக்களுடைய பிரதிநிதியாகச் சேவை செய்த முக்கிய குரு. மற்ற குருமார்களை இவர் மேற்பார்வை செய்தார். “முதன்மை குரு” என்றும் அழைக்கப்பட்டார். (2நா 26:20; எஸ்றா 7:5) வழிபாட்டுக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் இருந்த மகா பரிசுத்த அறைக்குள் நுழைவதற்கு இவர் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார். பாவப் பரிகார நாளில் மட்டும்தான் அந்த அறைக்குள் இவர் போனார். “தலைமைக் குரு” என்ற நாமம் இயேசு கிறிஸ்துவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. (லேவி 16:2, 17; 21:10; மத் 26:3; எபி 4:14).
☞ தலைமைத் தூதர்:
இந்த வார்த்தைகளுக்கு “தேவதூதர்களின் தலைவர்” என்று அர்த்தம். “தலைமை” என்ற வார்த்தைக்கு “தலைவர்,” “முக்கியமானவர்” என்று அர்த்தம். வேதாகமத்தில் இந்த வார்த்தை ஒருமையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரேவொரு தலைமைத் தூதர்தான் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தலைமைத் தூதரின் பெயர் “மிகாவேல்” என்று வேதாகமம் சொல்கிறது. (தானி 12:1; யூதா 9; வெளி 12:7).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக