பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஏ
☞ ஏத்தானீம்:
யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 7-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி முதல் மாதம். இது செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, இது திஷ்ரி என்று அழைக்கப்பட்டது. (1 இரா 8:2).
☞ ஏதோம்:
ஈசாக்கின் மகனான ஏசாவின் இன்னொரு பெயர். ஏசாவின் (ஏதோமின்) வம்சத்தார், சவக்கடலுக்கும் ஆகாபா வளைகுடாவுக்கும் இடையிலுள்ள சேயீர் மலைப்பகுதியை ஆக்கிரமித்தார்கள். இந்தப் பகுதி பின்பு ஏதோம் என்று அழைக்கப்பட்டது. (ஆதி 25:30; 36:8).
☞ ஏபோத்:
குருமார்கள் தங்களுடைய அங்கிமேல் அணிந்திருந்த உடை. தலைமைக் குரு ஒரு விசேஷ ஏபோத்தை அணிந்திருந்தார். இதன் முன்பகுதியில் விலை உயர்ந்த 12 கற்கள் பதிக்கப்பட்ட மார்ப்பதக்கம் இருந்தது. (யாத் 28:4,6).
☞ ஏரோது:
யூதர்களை ஆட்சி செய்த ஓர் அரச பரம்பரையின் குடும்பப் பெயர். இந்த ஆட்சியாளர்கள் ரோமர்களால் நியமிக்கப்பட்டார்கள். மகா ஏரோதுதான் அப்படி முதன்முதலில் நியமிக்கப்பட்டவன். எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டியவனும், இயேசுவைத் தீர்த்துக்கட்டுவதற்காகப் பிள்ளைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டவனும் இவன்தான். (மத் 2:16; லூ 1:5) இவனுடைய ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளை ஆளுவதற்கு, இவனுடைய மகன்களான ஏரோது அர்கெலாயுவும் ஏரோது அந்திப்பாவும் நியமிக்கப்பட்டார்கள். (மத் 2:22) கால்பங்கு தேசத்தை ஆட்சி செய்த ஏரோது அந்திப்பா, “ராஜா” என்று அழைக்கப்பட்டான். இவன், இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷ காலப்பகுதி முழுவதிலும், அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்திலுள்ள சம்பவங்கள் நடந்த காலப்பகுதி வரையிலும் ஆட்சி செய்தான். (மாற் 6:14-17; லூ 3:1, 19, 20; 13:31, 32; 23:6-15; அப் 4:28; 13:1) அதற்குப் பின்பு, மகா ஏரோதுவின் பேரனான முதலாம் ஏரோது அகிரிப்பா, ஆட்சிக்கு வந்த கொஞ்சக் காலத்திலேயே தேவதூதரால் கொல்லப்பட்டான். (அப் 12:1-6, 18-23) பிறகு, இவனுடைய மகனான இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவானான்; யூதர்கள் ரோமர்களுக்கு எதிராகக் கலகம் செய்த காலம்வரை இவன் ஆட்சி செய்தான். (அப் 23:35; 25:13, 22-27; 26:1, 2, 19-32).
☞ ஏரோதுவின் ஆதரவாளர்கள்:
இவர்கள் ஏரோதியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்; இவர்கள் தேசியவாத கட்சியைச் சேர்ந்தவர்கள். ரோமர்களின்கீழ் ஆட்சி செய்துகொண்டிருந்த ஏரோது ராஜாக்களின் அரசியல் லட்சியங்களை ஆதரித்தவர்கள். சதுசேயர்களில் சிலர் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். இயேசுவை எதிர்ப்பதற்காக பரிசேயர்களோடு இந்த ஏரோதியர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டார்கள். (மாற் 3:6).
☞ ஏறுதலின் பாடல்:
120 முதல் 134-வரையான சங்கீதங்களின் மேல்குறிப்பு. இதற்கு நிறைய அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், கடவுளை வணங்க எருசலேமுக்கு ‘ஏறிப்போனபோது’ இஸ்ரவேலர்கள் இந்த 15 சங்கீதங்களையும் சந்தோஷமாகப் பாடினார்கள் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். முக்கியமான மூன்று வருடாந்தரப் பண்டிகைகளுக்காக, யூதா மலைகளின் உச்சியில் அமைந்திருந்த எருசலேமுக்கு இஸ்ரவேலர்கள் ஏறிப்போனார்கள்.








