வெள்ளி, 6 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ இ




☞ இகாயோன்:
இசை சம்பந்தப்பட்ட குறிப்பு. இதை சங்கீதம் 9:16-ல் பார்க்கலாம். பாட்டின் இடையில் வரும் பயபக்தியூட்டுகிற, குறைந்த சுருதியில் இசைக்கப்படுகிற யாழ் இசை அல்லது தியானிப்பதற்காகப் பாட்டின் இடையில் வரும் நிறுத்தம்.

☞ இசைக் குழுவின் தலைவன்:
சங்கீதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இதற்கான எபிரெய வார்த்தை, குறிப்பிட்ட விதத்தில் பாடல்களை ஒழுங்கமைத்த, அந்தப் பாடல்கள் பாடப்படுவதை மேற்பார்வை செய்த, லேவியப் பாடகர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஒத்திகை பார்த்த, இசை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய நபரைக் குறித்தது. மற்ற மொழிபெயர்ப்புகளில், “இராகத்தலைவன்” அல்லது “பாடகர் தலைவன்” என்று உள்ளது. (சங் 4 மற்றும் 5-ன் மேல்குறிப்பு).

☞ இடுக்கிகள்:
தங்கத்தால் செய்யப்பட்ட கருவிகள், பார்ப்பதற்குக் குறடு போல இருந்திருக்கலாம். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் இருந்த விளக்குகளை அணைப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டன. (யாத். 37:23).

☞ இல்லிரிக்கம்:
கிரேக்கு தேசத்தின் வடமேற்கில் இருந்த ரோம மாகாணம். ஊழியத்திற்காக இல்லிரிக்கம்வரை பவுல் பயணம் செய்தார் என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால், அவர் இல்லிரிக்கத்தில் ஊழியம் செய்தாரா அல்லது இல்லிரிக்கம் வரைதான் ஊழியம் செய்தாரா என்று சொல்வதில்லை. (ரோமர் 15:19).

☞ இறைவாக்குரைப்பவர்:
கடவுளுடைய தீர்மானங்களைப் புரிந்துகொள்ளும் திறனை கடவுளிடமிருந்தே பெற்றவர்; மற்ற மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் கடவுள் இவர்களுடைய கண்களைத் திறந்திருந்தார். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “பார்ப்பது” என்று அர்த்தம். இது நேரடியாகப் பார்ப்பதையோ அடையாள அர்த்தத்தில் பார்ப்பதையோ குறிக்கலாம். ஜனங்களுக்குப் பிரச்சினை வந்தபோது, இறைவாக்கு சொல்பவரிடம் போய் ஞானமான அறிவுரைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். (1 சாமு. 9:9).

☞ இஸ்ரவேல்:
யாக்கோபுக்குக் கடவுள் கொடுத்த பெயர். பிற்பாடு, ஒரே காலப்பகுதியில் வாழ்ந்த அவருடைய வம்சத்தாரை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. யாக்கோபுடைய 12 மகன்களின் வம்சத்தார் இஸ்ரவேலின் மகன்கள், இஸ்ரவேல் வம்சத்தார், இஸ்ரவேல் மக்கள் (ஆண்கள்), இஸ்ரவேலர்கள் என்றெல்லாம் பெரும்பாலும் அழைக்கப்பட்டார்கள். தெற்கு ராஜ்யத்திலிருந்து பிரிந்த பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யமும் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். (கலா. 6:16; ஆதி. 32:28; 2 சாமுவேல் 7:23; ரோமர் 9:6).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக