வெள்ளி, 20 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஊ, எ




☞ ஊரீம், தும்மீம் : 
தேசத்தில் சிக்கலான பிரச்சினைகள் வந்தபோது, கர்த்தரின் தீர்மானத்தைத் தெரிந்துகொள்ள தலைமைக் குரு இவற்றைப் பயன்படுத்தினார். இவற்றால் குலுக்கல் போட்டு பார்த்தார். தலைமைக் குரு வழிபாட்டுக் கூடாரத்துக்குள் போனபோது, அவருடைய மார்ப்பதக்கத்துக்குள் இவை வைக்கப்பட்டன. பாபிலோனியர்கள் எருசலேமை அழித்த பிறகு இந்த வழக்கம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. (யாத். 28:30; நெகே. 7:65).

☞ எக்காளம் :
வாயினால் ஊதப்படும் உலோகக் கருவி. அறிவிப்பு செய்வதற்காகவும் இசை இசைப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. இரண்டு வெள்ளி எக்காளங்களை கர்த்தர் செய்யச் சொன்னதாக எண்ணாகமம் 10:2 சொல்கிறது; மக்களை ஒன்றுகூட்டுவதற்கும், ஒரு இடத்திலிருந்து புறப்படச் செய்வதற்கும், போர் அறிவிப்பு செய்வதற்கும் வெவ்வேறு தொனிகளில் இவை ஊதப்பட்டன. மிருகங்களின் கொம்புகளில் செய்யப்பட்ட ‘ஊதுகொம்பை’ போல வளைவாக இல்லாமல் இவை நேராக இருந்திருக்கலாம். ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளில் எக்காளங்களும் இருந்தன. ஆனால், இவை எப்படிச் செய்யப்பட்டிருந்தன என்று வேதாகமம் குறிப்பிடுவதில்லை. கர்த்தரின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டபோதும், அவர் மூலமாகச் சில முக்கியச் சம்பவங்கள் நடந்தபோதும் அடையாள அர்த்தத்தில் எக்காளம் முழங்கப்பட்டது. (2 நாளாக. 29:26; எஸ்றா 3:10; 1 கொரி. 15:52; வெளி 8:7-11:15).

☞ எட்டி :
இது பொதுவாக, பயங்கர கசப்பும், பயங்கர வாசமும் உள்ள செடி வகைகளைக் குறிக்கிறது. இவற்றின் தண்டுகள் மிகவும் உறுதியாக இருக்கும். ஒழுக்கக்கேடு, அடிமைத்தனம், அநியாயம், விசுவாசதுரோகம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகளை விவரிப்பதற்கு வேதாகமம் இந்த வார்த்தையை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 8:11-ல், “எட்டி” என்ற வார்த்தை கசப்பான, விஷத்தன்மையுள்ள ஒரு பொருளைக் குறிக்கிறது; இது அப்சிந்தே என்றும் அழைக்கப்படுகிறது. (உபா 29:18; நீதி 5:4; எரே 9:15; ஆமோ 5:7).

☞ எத்தியோப்பியா :
எகிப்தின் தெற்குப் பகுதியில் இருந்த பண்டைய தேசம். தற்போதைய எகிப்தின் தெற்குப் பகுதியும் தற்போதைய சூடானின் வடக்குப் பகுதியும் இதன் பாகமாக இருந்தன. சில இடங்களில், “கூஷ்” என்ற எபிரெயப் பெயருக்குப் பதிலாக இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எஸ்தர் 1:1).

☞ எதித்தூன் :
39, 62, 77-ஆம் சங்கீதங்களின் மேல்குறிப்பில் இருக்கும் பெயர். இதன் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ஒரு சங்கீதத்தை எப்படிப் பாட வேண்டும், அதாவது எந்தப் பாணியில் பாட வேண்டும் அல்லது எந்த இசைக் கருவி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அறிவுரையாக இது இருந்திருக்கலாம். எதித்தூன் என்ற பெயரில் லேவிய இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். அதனால், இந்தப் பாணி அல்லது இசைக் கருவி அவரோடோ அவருடைய மகன்களோடோ சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

☞ எப்பா :
இது ஒரு திட அளவை. தானியங்களை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரமும் எப்பா என்று அழைக்கப்பட்டது. இது ஒரு பாத் அளவுக்குச் சமமாக இருந்தது. அதனால் இதன் அளவு 22 லிட்டர். (யாத் 16:36; எசே 45:10)

☞ எப்பிராயீம் :
யோசேப்பின் இரண்டாவது மகனுடைய பெயர். பிற்பாடு, ஓர் இஸ்ரவேல் கோத்திரமும் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டது. இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பத்துக் கோத்திர ராஜ்யம் முழுவதும் எப்பிராயீம் என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், எப்பிராயீம் அதன் மிக முக்கியக் கோத்திரமாக இருந்தது. (ஆதி 41:52; எரே 7:15).

☞ எபிரெயர் :
இந்தப் பட்டப்பெயர் முதன்முதலில் ஆபிராமுக்கு (ஆபிரகாமுக்கு) கொடுக்கப்பட்டது. அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றியிருந்த எமோரியர்களிடமிருந்து இது அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. பிற்பாடு, ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் வம்சத்தாரைக் குறிப்பதற்காகவும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. (ஆதி 14:13; யாத் 5:3).

☞ எபிரெயு :
எபிரெயர்கள் பேசிய மொழி. இயேசுவின் காலத்துக்குள், இதில் நிறைய அரமேயிக் வார்த்தைகள் கலந்துவிட்டன. இந்த மொழியைத்தான் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பேசினார்கள். (அப் 26:14).

☞ எலூல் :
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 6-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 12-ஆம் மாதம். இது ஆகஸ்ட் பாதியில் ஆரம்பித்து செப்டம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 6:15)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக