பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கு
☞ கும்பம்:
ஒரு தூணின் உச்சியில் வேலைப்பாடுகளுடன் அமைந்த பகுதி. சாலொமோனுடைய ஆலயத்தின் முன்னால் யாகீன், போவாஸ் என்ற இரண்டு தூண்கள் இருந்தன. (1 இரா. 7:16)
☞ குயவர்:
மண் பானைகளையும் மற்ற மண் பாத்திரங்களையும் செய்பவர். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “உருவாக்குபவர்” என்று அர்த்தம். களிமண்மீது குயவருக்கு இருக்கிற அதிகாரத்தைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. மக்களையும் தேசங்களையும் ஆட்சி செய்கிற உரிமை கர்த்தருக்கு இருக்கிறது என்பதை விளக்குவதற்கு வேதாகமம் பெரும்பாலும் இந்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறது. (ஏசா 64:8; ரோ 9:21).
☞ குலதெய்வச் சிலைகள்:
சில சமயங்களில், குறி கேட்பதற்காக இவை பயன்படுத்தப்பட்டன. (எசே 21:21) சில சிலைகள், உருவத்திலும் உயரத்திலும் மனிதனைப் போல் இருந்தன. மற்ற சிலைகளோ, சிறியவையாக இருந்தன. (ஆதி 31:34; 1சா 19:13, 16) இந்தச் சிலைகளை வைத்திருந்தவருக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தது என்பதை மெசொப்பொத்தாமியாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. (ராகேல் தன் அப்பாவிடமிருந்து குலதெய்வச் சிலையை எடுத்ததற்கான காரணம் இதிலிருந்து புரிகிறது.) ஆனால், இஸ்ரவேலில் இந்த வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. நியாயாதிபதிகளின் காலத்திலும், ராஜாக்களின் காலத்திலும் குலதெய்வச் சிலைகளை மக்கள் வழிபட்டார்கள்; உண்மையுள்ள ராஜாவான யோசியா, மற்ற பொருள்களோடு சேர்த்து குலதெய்வச் சிலைகளையும் அழித்துப்போட்டார். (நியா 17:5; 2ரா 23:24; ஓசி 3:4).
☞ குலுக்கல்:
தீர்மானங்களை எடுப்பதற்காகக் குலுக்கல் போடப்பட்டது. கூழாங்கற்கள், சிறிய மரத்துண்டுகள் அல்லது கற்கள் ஆகியவை குலுக்கிப் போடப்பட்டன. உடையின் மடிப்புகளில் அல்லது பாத்திரங்களில் போடப்பட்டு பின்பு குலுக்கப்பட்டன. அதிலிருந்து வெளியே வந்து விழுந்த அல்லது வெளியே எடுக்கப்பட்ட ஒன்றுதான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஜெபத்துக்குப் பின்புதான் பெரும்பாலும் குலுக்கல் போடப்பட்டது. “குலுக்கல்” என்பதற்கான மூலமொழி வார்த்தைக்கு, “பங்கு” அல்லது “சொத்து” என்ற அர்த்தங்களும் உள்ளன. (யோசு 14:2; சங் 16:5; நீதி 16:33; மத் 27:35).
☞ குற்ற நிவாரண பலி:
தான் செய்த பாவங்களுக்காக ஒருவர் செலுத்தும் பலி. இது மற்ற பாவப் பரிகார பலிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. பாவம் செய்ததால் இழந்துவிட்ட சில ஒப்பந்த உரிமைகளை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காகவும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்காகவும், மனம் திருந்திய ஒருவர் செலுத்துகிற பலி. (லேவி 7:37; 19:21, 22; ஏசா 53:10).



