பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கா, கி, கீ
☞ காவல்காரர்:
முக்கியமாக, ராத்திரி நேரத்தில் மக்களையும் உடைமைகளையும் பாதுகாப்பவர். ஆபத்து வருவதைப் பார்த்தால் மற்றவர்களை எச்சரிப்பார். நகரத்தை நோக்கி வருபவர்களைத் தூரத்திலேயே பார்ப்பதற்கு வசதியாக, இவர் பெரும்பாலும் நகரத்து மதில்களில் அல்லது கோபுரங்களில் நிறுத்தப்பட்டார். படைப்பிரிவில் இருந்த காவல்காரர், காவலாளி என்றும் படைக்காவலர் என்றும் அழைக்கப்படுகிறார். தீர்க்கதரிசிகள் அடையாள அர்த்தத்தில் இஸ்ரவேல் தேசத்துக்குக் காவல்காரர்களாக இருந்து, வரப்போகிற அழிவைப் பற்றி எச்சரித்தார்கள். (2 இரா 9:20; எசே 3:17).
☞ கானான்:
நோவாவின் பேரன்; காமின் நான்காவது மகன். கானானின் வம்சத்தில் வந்த 11 கோத்திரத்தார் காலப்போக்கில் மத்தியதரைக் கடலின் கிழக்கே, எகிப்துக்கும் சீரியாவுக்கும் இடையிலுள்ள பகுதியில் குடியிருந்தார்கள். இந்தப் பகுதிதான் ‘கானான் தேசம்’ என்று அழைக்கப்பட்டது. (லேவி 18:3; ஆதி 9:18; அப் 13:19).
☞ கித்தீத்:
இசை சம்பந்தப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியவில்லை. காத் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கலாம். இந்த வார்த்தை திராட்சரச ஆலையைக் குறிக்கிறது. அதனால், கித்தீத் என்ற வார்த்தை திராட்சமது தயாரிக்கப்பட்ட சமயத்தில் பாடப்பட்ட பாடல்களின் இசையாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். (சங் 81).
☞ கிரேக்கர்கள்:
கிரேக்கு தேசத்தில் பிறந்தவர்கள் அல்லது கிரேக்கு தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். யூதரல்லாத மக்களையும், கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் இருந்தவர்களையும்கூட கிரேக்கர்கள் என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சொல்கிறது. (யோவே 3:6; யோவா 12:20).
☞ கிரேக்கு:
கிரேக்கு தேசத்து மக்கள் பேசும் மொழி.
☞ கிறிஸ்தவர்கள்:
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள். (அப் 11:26; 26:28).
☞ கிறிஸ்து:
இயேசுவின் பட்டப்பெயர். இது கிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கான எபிரெய வார்த்தை, “மேசியா,” அதாவது “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. (மத் 1:16; யோவா 1:41).
☞ கிஸ்லே:
யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பின்பு பயன்படுத்திய பரிசுத்த காலண்டரின்படி 9-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 3-ஆம் மாதம். இது நவம்பர் பாதியில் ஆரம்பித்து டிசம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 1:1; சக 7:1).
☞ கீலேயாத்:
யோர்தான் ஆற்றின் கிழக்கே, யாபோக் பள்ளத்தாக்கின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிவரை பரந்து விரிந்திருந்த செழிப்பான இடம்தான் கீலேயாத். ஆனால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் குடியிருந்த இஸ்ரவேல் பகுதி முழுவதையும் குறிப்பதற்காகக்கூட இந்த வார்த்தை சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எண் 32:1; யோசு 12:2; 2ரா 10:33).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக