பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஒ, ஓ
☞ ஒப்பந்தம்:
ஏதோ ஒன்றைச் செய்வதற்கோ செய்யாமல் இருப்பதற்கோ, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் அல்லது இரண்டு மனிதர்களுக்கு நடுவில் செய்யப்படுகிற உடன்படிக்கை. சில சமயங்களில், ஒருவர் மட்டுமே ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டியிருந்தது (இது ஒரு வாக்குறுதியாக இருந்தது). மற்ற சமயங்களில், இரண்டு தரப்பினருமே அந்த ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டியிருந்தது. கடவுள் மனிதர்களோடு செய்த ஒப்பந்தங்களைப் பற்றியும் தனி நபர்களும், கோத்திரங்களும், தேசங்களும், மக்கள் தொகுதிகளும் தங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியும் வேதாகமம் சொல்கிறது. ஆபிரகாமோடும், தாவீதோடும், இஸ்ரவேல் தேசத்தோடும் (திருச்சட்ட ஒப்பந்தம்), கடவுளுடைய இஸ்ரவேலர்களோடும் (புதிய ஒப்பந்தம்) கடவுள் செய்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. இவற்றைப் போன்ற ஒப்பந்தங்களால் நீண்ட கால நன்மைகள் கிடைத்திருக்கின்றன. (ஆதி 9:11; 15:18; 21:27; யாத் 24:7; 2 நாளா 21:7).
☞ ஓமர்:
இது ஒரு திட அளவை. 2.2 லிட்டருக்குச் சமம்; அதாவது எப்பாவில் பத்திலொரு பங்கு. (யாத் 16:16, 18).
☞ ஓய்வுநாள்:
இதற்கான எபிரெய வார்த்தைக்கு, “ஓய்வு எடுப்பது; நிறுத்துவது” என்று அர்த்தம். யூத வாரத்தின் ஏழாவது நாள். (வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம்வரை) சில பண்டிகை நாட்களும் ஓய்வுநாட்களாக இருந்தன. ஆலயத்தில் செய்யப்பட்ட குருத்துவச் சேவைகளைத் தவிர, ஓய்வுநாளில் வேறெந்த வேலையையும் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை. 7-ஆம் மற்றும் 50-ஆம் வருஷங்கள் ஓய்வு வருஷங்கள் என்று அழைக்கப்பட்டன. ஓய்வு வருஷங்களில், நிலம் பயிர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது. அதோடு, கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று எபிரெயர்கள் தங்கள் சகோதரர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஓய்வுநாள் பற்றிய திருச்சட்ட விதிமுறைகள் நியாயமாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் மதத்தலைவர்கள் வேறுபல விதிமுறைகளையும் அதனோடு சேர்த்தார்கள். அதனால், இயேசுவின் நாட்களில் வாழ்ந்த மக்களுக்கு அவற்றைக் கடைப்பிடிப்பது கஷ்டமாக இருந்தது. (யாத் 20:8; லேவி 25:4; லூக் 13:14-16; கொலோ 2:16).
☞ ஓரேப்:
ஓரேப் மலை.
சீனாய் மலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி ஓரேப் என்று அழைக்கப்பட்டது. சீனாய் மலை, ஓரேப் மலை என்றும் அழைக்கப்பட்டது. (யாத் 3:1; உபா 5:2).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக