புதன், 28 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ந, நா




☞ நசரேயர்:
‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்,’ ‘அர்ப்பணிக்கப்பட்டவர்,” ‘பிரித்து வைக்கப்பட்டவர்’ என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. நசரேயர்களில் இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒரு பிரிவினர், நசரேயராக இருக்க தாங்களாகவே முன்வந்தவர்கள்; மற்றொரு பிரிவினர், கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நசரேயராக இருக்க விரும்புவதாக ஓர் ஆணோ பெண்ணோ கர்த்தரிடம் நேர்ந்துகொள்ளலாம். தாங்களாகவே முன்வந்து நேர்ந்துகொள்பவர்களுக்கு மூன்று முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தன:

(1) மது குடிக்கக் கூடாது, திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கிற எதையும் சாப்பிடக் கூடாது.

(2) தலைமுடியை வெட்டக் கூடாது.

(3) பிணத்தைத் தொடக் கூடாது.

கடவுளால் நியமிக்கப்பட்ட நசரேயர்கள், வாழ்நாள் முழுவதும் நசரேயர்களாகவே இருந்தார்கள்; அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை கர்த்தரே அவர்களுக்குச் சொல்லியிருந்தார். (எண் 6:2-7; நியா 13:5).

☞ நடுவர்கள்:
பாபிலோனிய அரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட மாகாணங்களில் இருந்த காவல்துறை நடுவர்கள், படைத்துறை சாராத ஊழியர்களாக இருந்தார்கள். இவர்களுக்குச் சட்டம் தெரிந்திருந்தது, தீர்ப்பளிக்கும் அதிகாரமும் ஓரளவு இருந்தது. ரோமக் குடியேற்றப் பகுதிகளில் இருந்த அரசு நடுவர்கள் அரசு நிர்வாகிகளாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது, நிதி நிலைமையைக் கட்டுப்படுத்துவது, குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு கொடுப்பது, தண்டனையை நிறைவேற்ற கட்டளை கொடுப்பது போன்றவை இவர்களுடைய வேலையாக இருந்தது. (தானி 3:2; அப் 16:20).

☞ நற்செய்தி:
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியும், இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பதால் கிடைக்கிற மீட்பைப் பற்றிய செய்தியும், நற்செய்தி என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்படுகிறது. (லூக் 4:18, 43; அப் 5:42; வெளி 14:6).

☞ நன்மை தீமை அறிவதற்கான மரம்:
ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது. (ஆதி 2:9,17).

☞ நன்றிப் பலிகள்:
கடவுள் கொடுத்த எல்லாவற்றுக்காகவும், அவருடைய மாறாத அன்புக்காகவும் அவரைப் புகழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட சமாதான பலி. மிருக பலியின் இறைச்சியும், புளிப்பான மற்றும் புளிப்பில்லாத ரொட்டியும் சாப்பிடப்பட்டன. இறைச்சியை அதே நாளில் சாப்பிட வேண்டியிருந்தது. (2 நாளா. 29:31).

☞ நாசரேத்தூரார்:
நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்தவராக இருந்ததால் இயேசுவுக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. ஏசாயா 11:1-ல், “தளிர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையோடு இது சம்பந்தப்பட்டிருக்கலாம். பிற்பாடு, இயேசுவின் சீஷர்களைக் குறிப்பிடும்போதும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. (மத் 2:23; அப் 24:5).

☞ நாரிழைத் துணி; நாரிழை உடை:
ஆளிவிதைச் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த துணி அல்லது உடை. இது லினன் என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தொ, தோ



☞ தொழுநோய்; தொழுநோயாளி:
இது பயங்கரமான தோல் நோய். இன்று தொழுநோய் என்று அழைக்கப்படுகிற நோயை மட்டுமே இது குறிப்பதில்லை. ஏனென்றால், வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தொழுநோய் மனிதர்களை மட்டுமல்லாமல் உடைகளையும் வீடுகளையும்கூட பாதித்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் தொழுநோயாளி என்று அழைக்கப்படுகிறார். (லேவி 14:54; லூக் 5:12).

☞ தொழுமரம்:
சித்திரவதை செய்வதற்காகவும் தண்டனை கொடுப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்ட கருவி. சில கருவிகளில், கால்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டன. மற்ற கருவிகளில், கால்கள், கைகள், கழுத்து ஆகியவையும் மாட்டி வைக்கப்பட்டன. (எரே 20:2; அப் 16:24).

☞ தோல் சுருள்:
செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கன்றுக்குட்டியின் தோலால் செய்யப்பட்ட பொருள்; இது எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பாப்பிரஸ் புல் சுருள்களைவிட நீடித்து உழைத்தது. அதனால் பரிசுத்த வேதாகமம் எழுதுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. பவுல் தீமோத்தேயுவிடம் கொண்டுவரச் சொன்ன தோல் சுருள்கள், அநேகமாக எபிரெய வேதாகமத்தின் சில பாகங்களாக இருந்திருக்கலாம். சவக்கடல் சுருள்களின் சில பாகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்தன. (2 தீமொ. 4:13).

☞ தோல் பை:
திராட்சமதுவை நிரப்பி வைப்பதற்காக, வெள்ளாடு, செம்மறியாடு போன்ற விலங்குகளின் முழு தோலால் செய்யப்பட்ட பை. திராட்சமது புளிக்கும்போது, அதிலிருந்து கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உருவாவதால், தோல் பைகளில் அழுத்தம் ஏற்படும். அதனால், புதிய தோல் பைகளில்தான் திராட்சமது நிரப்பப்பட்டது. புதிய தோல் பைகள் விரிவடைந்தன; ஆனால், பழைய தோல் பைகள் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்தன. (யோசு 9:4; மத் 9:17).

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தெ, தே




☞ தெக்கப்போலி:
பல கிரேக்க நகரங்கள் அடங்கிய பகுதி; ஆரம்பத்தில், பத்து நகரங்கள் இதில் இருந்தன. (தெக்கா என்ற கிரேக்க வார்த்தைக்கு “பத்து” என்றும், போலிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “நகரம்” என்றும் அர்த்தம்.) இந்த நகரங்களில் பெரும்பாலானவை யோர்தான் ஆறு மற்றும் கலிலேயா கடலின் கிழக்குப் பகுதியில் இருந்தன. இந்தப் பகுதியும் தெக்கப்போலி என்று அழைக்கப்பட்டது. இந்த நகரங்கள், கிரேக்க கலாச்சார மையமாகவும் வர்த்தக மையமாகவும் இருந்தன. இயேசு இந்தப் பகுதி வழியாகப் பயணம் செய்தார். ஆனால், இந்த நகரங்களுக்குள் போனதாக எந்தப் பதிவும் இல்லை. (மத் 4:25; மாற் 5:20).

☞ தேபேத்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 10-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 4-ஆம் மாதம். இது டிசம்பர் பாதியில் ஆரம்பித்து ஜனவரி பாதியில் முடிவடைந்தது. பொதுவாக, ‘பத்தாம் மாதம்’ என அழைக்கப்படுகிறது. (எஸ்தர் 2:16).

☞ தேவதூதர்கள்:
இதற்கான எபிரெய வார்த்தை மாலக்; கிரேக்க வார்த்தை ஆகிலோஸ். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் “தூதுவர்” என்று அர்த்தம். பரலோகத் தூதுவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “தூதர்கள்,” ‘தேவதூதர்கள்’ என்று இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (ஆதி 16:7; 32:3, யாக் 2:25; வெளி 22:8) மனிதர்களைப் படைப்பதற்குப் பல காலத்துக்கு முன்பே கடவுள் இந்தத் தேவதூதர்களைப் படைத்தார். இவர்களுக்கு அபார பலம் இருக்கிறது. இவர்களை “பரிசுத்த தூதர்கள்,” “கடவுளின் மகன்கள்,” “விடியற்கால நட்சத்திரங்கள்” என்று பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுகிறது. (உபா 33:2; யோபு 1:6, 38:7) இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இவர்கள் படைக்கப்படவில்லை, தனித்தனி நபர்களாகப் படைக்கப்பட்டார்கள். இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். (தானி 7:10) ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒரு பெயர் இருப்பதாகவும், தனித்தன்மை இருப்பதாகவும் வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது; அப்படியிருந்தும், மனிதர்களிடமிருந்து வணக்கத்தைப் பெற மறுத்து மனத்தாழ்மையைக் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான தேவதூதர்கள் தங்களுடைய பெயரைக்கூட சொன்னதில்லை. (ஆதி 32:29; லூ 1:26; வெளி 22:8, 9) அவர்களுக்கு வித்தியாசமான ஸ்தானங்களும் பொறுப்புகளும் இருக்கின்றன. கர்த்தரின் சிம்மாசனத்துக்கு முன்னால் சேவை செய்வது, அவருடைய செய்திகளை மற்றவர்களுக்குச் சொல்வது, பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களுக்கு உதவி செய்வது, அவருடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவது, பிரசங்க வேலையை ஆதரிப்பது என நிறைய பொறுப்புகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. (2 இரா 19:35; சங் 34:7; லூக் 1:30, 31; வெளி 5:11; 14:6) எதிர்காலத்தில் நடக்கப்போகும் அர்மகெதோன் போரில் இவர்கள் இயேசுவோடு சேர்ந்து போரிடுவார்கள். (வெளி 19:14, 15).

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தீ-தூ



☞ தீட்டு:
உடல் அசுத்தமாக இருப்பதையோ ஒழுக்கச் சட்டங்களை மீறுவதையோ இது அர்த்தப்படுத்தலாம். திருச்சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாத அசுத்தமான விஷயங்களைக் குறிப்பிட தீட்டு என்ற வார்த்தை வேதாகமத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (லேவி 5:2; 13:45; அப் 10:14; எபே 5:5).

☞ தீர்க்கதரிசனம்:
கடவுளிடமிருந்து வருகிற செய்தி. அவருடைய தீர்மானத்தை வெளிப்படுத்துவதற்காக அல்லது அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட செய்தி. இது கடவுளால் கொடுக்கப்பட்ட ஒழுக்க சம்பந்தமான போதனையாகவோ, கடவுளுடைய கட்டளையை அல்லது தீர்ப்பைப் பற்றிய அறிவிப்பாகவோ, எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றிய அறிவிப்பாகவோ இருக்கலாம். (எசே 37:9, 10; தானி 9:24; மத் 13:14; 2 பேது 1:20, 21).

☞ தீர்க்கதரிசி:
கடவுளுடைய நோக்கங்களைத் தெரியப்படுத்த அவரால் பயன்படுத்தப்பட்ட நபர். தீர்க்கதரிசிகள் கடவுளின் சார்பாக மக்களிடம் பேசினார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருந்த விஷயங்களை மட்டுமல்ல, கர்த்தருடைய போதனைகளையும் கட்டளைகளையும் தீர்ப்புகளையும்கூட அறிவித்தார்கள். (ஆமோ 3:7; 2 பேது 1:21).

☞ துக்கத் துணி:
சாக்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சொரசொரப்பான துணி; இதில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. பெரும்பாலும், இவை கருப்பு நிற ஆடுகளின் ரோமத்திலிருந்து தயாரிக்கப்பட்டன. பொதுவாக, துக்கம் அனுசரிக்கிற சமயத்தில் மக்கள் இதைப் போட்டுக்கொண்டார்கள். (ஆதி 37:34; லூக் 10:13).

☞ துக்கம் அனுசரிப்பது:
யாராவது இறந்துவிட்டாலோ, துயரமான சம்பவம் நடந்துவிட்டாலோ அந்தத் துக்கத்தை வெளிப்படையாகக் காட்டுவது. பைபிள் காலங்களில், குறிப்பிட்ட நாட்கள்வரை துக்கம் அனுசரிப்பது வழக்கமாக இருந்தது. துக்கம் அனுசரிப்பவர்கள் சத்தமாக அழுவது மட்டுமல்லாமல், இதற்கென்றே இருக்கிற உடைகளை அணிந்துகொள்வார்கள், சாம்பலைத் தலையில் போட்டுக்கொள்வார்கள், உடைகளைக் கிழித்துக்கொள்வார்கள், நெஞ்சில் அடித்துக்கொள்வார்கள். கூலிக்காகத் துக்கம் அனுசரிப்பவர்கள் சில சமயம் சவ அடக்க நிகழ்ச்சியின்போது அழைக்கப்பட்டார்கள். (ஆதி 23:2; எஸ்தர் 4:3; வெளி 21:4).

☞ தூண்:
முக்கியமான விஷயங்களின் அல்லது சம்பவங்களின் நினைவாக இவை வைக்கப்பட்டன. சாலொமோன் கட்டிய ஆலயத்திலும், அவர் கட்டிய மற்ற மாளிகைகளிலும் மண்டபங்களிலும் இவை இருந்தன. பொய் தெய்வங்களை வணங்கிய ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களுக்காகப் பூஜைத் தூண்களை வைத்தார்கள். சில சமயங்களில், இஸ்ரவேலர்களும் இவர்களைப் போலவே செய்தார்கள். (நியா 16:29; 1ரா 7:21; 14:23).

☞ தூபப்பொருள்:
நறுமணப் பிசின்களும் வாசனை எண்ணெய்களும் சேர்ந்த கலவை. இது மெதுவாக எரிந்து, வாசனையான புகையைத் தரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்துவதற்காக நான்கு பொருள்கள் கலந்த விசேஷ தூபப்பொருள் தயாரிக்கப்பட்டது. பரிசுத்த அறையில் இருந்த தூபபீடத்தில் காலையிலும் மாலையிலும் இது எரிக்கப்பட்டது. பாவப் பரிகார நாளன்று மகா பரிசுத்த அறையில் இது எரிக்கப்பட்டது. கடவுள் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்யும் ஜெபங்களுக்கு இது அடையாளமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் இதைப் பயன்படுத்தும்படி எதிர்பார்க்கப்படவில்லை. (யாத் 30:34, 35; லேவி 16:13; வெளி 5:8).