பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ந, நா
☞ நசரேயர்:
‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்,’ ‘அர்ப்பணிக்கப்பட்டவர்,” ‘பிரித்து வைக்கப்பட்டவர்’ என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. நசரேயர்களில் இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒரு பிரிவினர், நசரேயராக இருக்க தாங்களாகவே முன்வந்தவர்கள்; மற்றொரு பிரிவினர், கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நசரேயராக இருக்க விரும்புவதாக ஓர் ஆணோ பெண்ணோ கர்த்தரிடம் நேர்ந்துகொள்ளலாம். தாங்களாகவே முன்வந்து நேர்ந்துகொள்பவர்களுக்கு மூன்று முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தன:
(1) மது குடிக்கக் கூடாது, திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கிற எதையும் சாப்பிடக் கூடாது.
(2) தலைமுடியை வெட்டக் கூடாது.
(3) பிணத்தைத் தொடக் கூடாது.
கடவுளால் நியமிக்கப்பட்ட நசரேயர்கள், வாழ்நாள் முழுவதும் நசரேயர்களாகவே இருந்தார்கள்; அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை கர்த்தரே அவர்களுக்குச் சொல்லியிருந்தார். (எண் 6:2-7; நியா 13:5).
☞ நடுவர்கள்:
பாபிலோனிய அரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட மாகாணங்களில் இருந்த காவல்துறை நடுவர்கள், படைத்துறை சாராத ஊழியர்களாக இருந்தார்கள். இவர்களுக்குச் சட்டம் தெரிந்திருந்தது, தீர்ப்பளிக்கும் அதிகாரமும் ஓரளவு இருந்தது. ரோமக் குடியேற்றப் பகுதிகளில் இருந்த அரசு நடுவர்கள் அரசு நிர்வாகிகளாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது, நிதி நிலைமையைக் கட்டுப்படுத்துவது, குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு கொடுப்பது, தண்டனையை நிறைவேற்ற கட்டளை கொடுப்பது போன்றவை இவர்களுடைய வேலையாக இருந்தது. (தானி 3:2; அப் 16:20).
☞ நற்செய்தி:
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியும், இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பதால் கிடைக்கிற மீட்பைப் பற்றிய செய்தியும், நற்செய்தி என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்படுகிறது. (லூக் 4:18, 43; அப் 5:42; வெளி 14:6).
☞ நன்மை தீமை அறிவதற்கான மரம்:
ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது. (ஆதி 2:9,17).
☞ நன்றிப் பலிகள்:
கடவுள் கொடுத்த எல்லாவற்றுக்காகவும், அவருடைய மாறாத அன்புக்காகவும் அவரைப் புகழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட சமாதான பலி. மிருக பலியின் இறைச்சியும், புளிப்பான மற்றும் புளிப்பில்லாத ரொட்டியும் சாப்பிடப்பட்டன. இறைச்சியை அதே நாளில் சாப்பிட வேண்டியிருந்தது. (2 நாளா. 29:31).
☞ நாசரேத்தூரார்:
நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்தவராக இருந்ததால் இயேசுவுக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. ஏசாயா 11:1-ல், “தளிர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையோடு இது சம்பந்தப்பட்டிருக்கலாம். பிற்பாடு, இயேசுவின் சீஷர்களைக் குறிப்பிடும்போதும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. (மத் 2:23; அப் 24:5).
☞ நாரிழைத் துணி; நாரிழை உடை:
ஆளிவிதைச் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த துணி அல்லது உடை. இது லினன் என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக