வெள்ளி, 26 மே, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 4

எஸ்பால்

2012-ல், மூவாயிரம் வருஷங்கள் பழமையான ஒரு மண் ஜாடியின் சிறு துண்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அதைப் பார்த்ததும் அவர்களுக்கு ஒரே சந்தோஷம்! அதற்குக் காரணம், அந்த ஜாடியின் சிறு துண்டுகள் அல்ல, அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள்தான்!

தங்களுக்குக் கிடைத்த துண்டுகளை ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாகச் சேர்த்தபோது, அந்த ஜாடியில் எழுதப்பட்டிருந்த கானானிய எழுத்துக்களை அவர்களால் வாசிக்க முடிந்தது. “இஷ்பேல் பென் பீடா” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. “பீடாவின் மகன் எஸ்பால்” என்பதுதான் அதனுடைய அர்த்தம். இந்தப் பெயர் ஒரு பழங்கால பொருள்மீது இருப்பதை அப்போதுதான் ஆராய்ச்சியாளர்கள் முதல் முதலில் கண்டுபிடித்தார்கள்.

பரிசுத்த வேதாகமத்தில் எஸ்பால் என்ற பெயரில் இன்னொருவரும் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவர் சவுல் ராஜாவின் மகன்களில் ஒருவர். (1 நா. 8:33; 9:39) இந்த மண் ஜாடியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான யோசெஃப் கார்ஃபின்கெல் என்ற பேராசிரியர் இப்படிச் சொன்னார்: “எஸ்பால் என்ற பெயர் வேதாகமத்தில், தாவீது ராஜாவின் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் இருந்தது. இப்போது, தொல்பொருள் ஆராய்ச்சியின் பதிவிலும் அந்தப் பெயரைத் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.” பரிசுத்த வேதாகமத்தின் பதிவுகளைத் தொல்பொருள் ஆராய்ச்சி ஆதரிக்கிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம்!

வேதாகமத்தில், சவுலின் மகன் எஸ்பால் என்பவர் இஸ்போசேத் என்றும் அழைக்கப்படுகிறார். (2 சா. 2:10) “பால்” என்பதற்குப் பதிலாக “போசேத்” என்ற பெயர் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எஸ்பால் என்ற பெயர், கானானியர்கள் வணங்கிய ‘பால்’ என்ற புயல் கடவுளை இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தலாம் என்பதற்காக, 2 சாமுவேல் புத்தகத்தில் இந்தப் பெயர் பயன்படுத்தப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனாலும், எஸ்பால் என்ற பெயர் 1 நாளாகமம் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 23 மே, 2017

அல்லேலூயா, ஆமென் ;


அல்லேலூயா


“அல்லேலூயா” என்பது இரண்டு வார்த்தைகளின் கூட்டு (அல்லேலூயா = அல்லேலூ + யா)

“அல்லேலூயா” என்றால் “யா என்பவரை துதியுங்கள்” (கர்த்தரை நீங்கள் துதியுங்கள் அல்லது கர்த்தரை துதியுங்கள்) என்று அர்த்தமாகும். ஒரு சில பண்டிதர்கள் “தேவனுக்கே மகிமை” என்றும் இதன் அர்த்ததை சொல்லுவார்கள்.

“அல்லேலூயா” என்ற பதம் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 24 முறை வருகிறது. அதுவும் சங்கீத புஸ்தகத்தில் மட்டும் தான் வருகிறது.

இப்பதம் புதிய ஏற்பாட்டில் மொத்தம் 4 முறைதான் வருகிறது. அதுவும் வெளிப்படுத்தின விசேஷத்தில் மட்டும் தான் வருகிறது (வெளி 19அதி).

இந்தப்பதம் 7 சங்கீதங்களில் ஒவ்வொருமுறை வருகிறது (104, 105, 111, 112,115,116,117) 7 சங்கீதங்களில் இரண்டுமுறை வருகிறது (106, 113, 135, 146, 147, 149, 150) ஒரு சங்கீதத்தில் மட்டும் 3 முறை வருகிறது (148).

வேதத்திலே முதன் முதலா அல்லேலூயா என்ற வார்த்தை சங் 104:35-ல் தான் வருகிறது. கடைசியாக வெளி 19:6-ல் வருகிறது.

ஆமென்

“ஆமென்” என்ற எபிரெய வார்த்தை, ஆங்கிலத்திலும் கிரேக்குவிலும் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஜெபம், ஆணை, ஆசீர்வாதம், சாபம் ஆகியவற்றைக் கேட்ட பிறகு கடைசியில் எல்லாரும் சேர்ந்து சொல்கிற அந்த வார்த்தை, “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே” என்ற அர்த்தத்தைத் தருகிறது. அது, சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆமோதிப்பதைக் குறிக்கிறது. அந்த வார்த்தை “நிச்சயமானது, உண்மையானது, நம்பகமானது, சந்தேகத்திற்கு இடமில்லாதது என்றெல்லாம் அர்த்தப்படுத்துகிறது.” வேதாகம காலங்களில், ஒருவர் ஆணையிட்டபோதோ ஒப்பந்தம் செய்தபோதோ மற்றவர் “ஆமென்” என்று சொன்னது, சட்டப்படி அதற்குக் கட்டுப்பட்டு நடக்க அவர் ஒப்புக்கொண்டதைக் காட்டியது; அதாவது, அவர் அதை ஏற்றுக்கொண்டதையும், அதை மீறும்போது வரும் விளைவுகளைச் சந்திக்கத் தயாராய் இருந்ததையும் காட்டியது. (உபாகமம் 27:15-26).

இயேசு பிரசங்கித்தபோதும் போதித்தபோதும் சில குறிப்புகளைச் சொல்ல ஆரம்பிக்கையில் “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதன் மூலம், தாம் சொல்லவிருந்த விஷயம் எந்தளவு நம்பகமானது என்பதை வலியுறுத்திக் காட்டினார். அந்தச் சந்தர்ப்பங்களில் “ஆமென்” என்ற வார்த்தை, “உண்மையாகவே” அல்லது “மெய்யாகவே” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 5:18; 6:2,5) யோவானின் சுவிசேஷம் முழுவதிலும் காணப்படுவதுபோல், “ஆமென்” என்ற வார்த்தையை இயேசு இருமுறை பயன்படுத்திய சந்தர்ப்பங்களில் அது “உண்மையாகவே உண்மையாகவே” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (யோவான் 1:51) இப்படி அவர் அதை இருமுறை பயன்படுத்தியிருப்பதை சுவிசேஷப் புத்தகங்களில் மட்டுமே காண முடிகிறது.

அது மட்டுமல்ல, ஆமென் என்ற சொல்லுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஆமென் என்பது இயேசுவின் சிறப்புப் பெயர். வெளிப்படுத்தல் புத்தகம் இயேசுவை ஆமென் எனப்படுபவர் என்று குறிப்பிடுகிறது (3:14). அதற்கு உண்மையுள்ளவர், நம்பிக்கைக்குரியவர் என்பது பொருள். எனவே, ஆமென் என்று சொல்லும்போதெல்லாம் இயேசுவின் பெயரையும் அறிக்கையிடுகிறோம்.

வெள்ளி, 19 மே, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 3

யோயாக்கீன்

இன்றைய ஈராக்கில், பண்டைய பாபிலோன் நகரத்தின் இடிபாடுகளைத் தோண்டி எடுத்தபோது, இஷ்டார் வாயில் அருகே க்யூனிஃபார்ம், அதாவது, ஆப்புவடிவ எழுத்துகளுள்ள சுமார் 300 பலகைகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அவை, பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்தவை; அவற்றிலுள்ள பெயர் பட்டியல் ஒன்றில், “யுகின், யஹூத் தேசத்தின் ராஜா” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.



இது, யூத தேசத்தின் ராஜாவான யோயாக்கீனைக் குறிக்கிறது; இவர், கி.மு. 617-⁠ல் எருசலேமை முதன்முறையாக நேபுகாத்நேச்சார் கைப்பற்றியபோது பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டார். (2 இராஜாக்கள் 24:11-15) யோயாக்கீனின் ஐந்து மகன்களுடைய பெயர்களும் அந்தப் பலகைகளில் காணப்படுகின்றன. (1 நாளாகமம் 3:17-18).

வெள்ளி, 12 மே, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 2

2005-ஆம் ஆண்டு, தாவீது ராஜாவின் அரண்மனையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஓர் இடத்தைத் தோண்டினார்கள்; அப்போது, பெரிய கல் கட்டடம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அது, 2,600-⁠க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தருடைய தீர்க்கதரிசியான எரேமியா வாழ்ந்த காலத்தில், எருசலேமை பாபிலோனியர்கள் தீக்கிரையாக்கியபோது அழிக்கப்பட்டிருக்கலாமென அவர்கள் நம்பினார்கள். அது தாவீதின் அரண்மனையின் எஞ்சிய பாகமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும், சுவாரசியமூட்டும் முக்கியப் பொருள் ஒன்றை அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஏலாட் மசார் கண்டுபிடித்தார்; அது 1 சென்டிமீட்டர் அகலமுள்ள களிமண் முத்திரை ஆகும்: அதில், “ஷாவியின் மகனான ஷெலெமியாஹுவின் மகனான யஹுகாலுடையது” என்ற வாசகம் காணப்படுகிறது. இந்த முத்திரை உண்மையில் எரேமியாவை எதிர்த்து வந்ததாக வேதாகமத்தில் குறிப்பிடப்படும் யூத அதிகாரியான யஹுகால் (யூகால் என்றும் அறியப்பட்டார்) என்பவருடையது. - எரேமியா 37:3; 38:1-6.


இந்த யூகால், சாப்பானின் குமாரனான கெமரியாவுக்கு அடுத்தபடியான “இரண்டாவது அரசவை மந்திரி” என்று மசார் குறிப்பிடுகிறார்; இந்த யூகாலின் பெயரே தாவீதின் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் காணப்படுகிறது. இந்த யூகாலை, செலேமியாவின் (ஷெலெமியாஹுவின்) குமாரன், யூதாவின் பிரபுவென வேதாகமம் அடையாளம் காட்டுகிறது. இந்த முத்திரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பரிசுத்த வேதாகமத்தை வாசிப்பவர்கள் மட்டுமே இவரை அறிந்திருந்தார்கள். மற்றவர்கள் அறியாதிருந்தார்கள்.

வியாழன், 11 மே, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ;

அசீரிய ராஜாவான இரண்டாம் சர்கோனின் பெயர் ஏசாயா 20:1-⁠ல் காணப்படுகிறது; ஆனால், அப்படி ஒரு நபர் உண்மையில் வாழவே இல்லையென ஒரு சமயம் பிரபல அறிஞர்கள் நினைத்தார்கள். எனினும், 1843-⁠ல் ஈராக்கில் இன்றைய கர்சபாத் நகருக்கு அருகில், டைகிரீஸ் நதியின் உபநதியினுடைய கரையில் சர்கோனின் அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 25 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது. ஒருகாலத்தில் உலகத்தார் எவரும் அறிந்திராத இரண்டாம் சர்கோன், இன்று பிரபல அசீரிய ராஜாக்களில் ஒருவராய் கருதப்படுகிறார்.


  • அவருடைய பதிவேடுகள் ஒன்றில், இஸ்ரவேலரின் நகரமான சமாரியாவைக் கைப்பற்றியதாக அவர் சொல்கிறார். வேதாகம காலவரிசைப் பட்டியலின்படி, கி.மு. 740-⁠ல் சமாரியாவை அசீரியர்கள் கைப்பற்றினார்கள். அஸ்தோத்தைக் கைப்பற்றியதாகவும்கூட சர்கோன் எழுதியிருப்பது, ஏசாயா 20:1-⁠ஐ மேலும் உறுதிப்படுத்துகிறது.