பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சீ
☞ சீயுஸ்:
கிரேக்கர்கள் வழிபட்ட ஏராளமான தெய்வங்களில் இது மிக முக்கியமான தெய்வம். லீஸ்திராவில் இருந்த மக்கள் பர்னபாவை சீயுஸ் என்று தவறாக நினைத்தார்கள். லீஸ்திராவுக்குப் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகளில், “சீயுசின் பூசாரிகள்,” “சூரியக் கடவுளாகிய சீயுஸ்” ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. மெலித்தா தீவிலிருந்து பவுல் பயணம் செய்த கப்பலின் முன்பகுதியில் “சீயுசின் மகன்களுடைய” சின்னங்கள், அதாவது, இரட்டைச் சகோதரர்களான கேஸ்டர் மற்றும் போலக்ஸின் சின்னங்கள் இருந்தன. (அப் 14:12; 28:11).
☞ சீயோன்; சீயோன் மலை:
எபூசியர்களின் கோட்டை நகரமாகிய எபூசுவின் பெயர்தான் சீயோன். இது எருசலேமின் தென்கிழக்கு மலைமீது இருந்தது. தாவீது இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்பு, இங்கே தன் அரண்மனையைக் கட்டினார். இது “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. (2சா 5:7, 9) உடன்படிக்கைப் பெட்டியை தாவீது சீயோனுக்குக் கொண்டுவந்த பின்பு, இந்த மலை கர்த்தருக்குப் பரிசுத்தமான மலையாக ஆனது. பிற்பாடு, இந்தப் பெயர் மோரியா மலைமீது இருந்த ஆலயப் பகுதியையும், சில சமயங்களில், எருசலேம் நகரம் முழுவதையும் குறித்தது. சில இடங்களில் வேதாகமத்தில், இந்தப் பெயர் பெரும்பாலும் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (சங் 2:6; 1 பேது 2:6; வெளி 14:1).
☞ சீரியா; சீரியர்கள்/அராம்; அரமேயர்கள்:
இவர்கள் சேமின் மகனாகிய அராமின் வம்சத்தில் வந்தவர்கள். லீபனோன் மலைகளிலிருந்து மெசொப்பொத்தாமியா வரையுள்ள பகுதிகளிலும், வடக்கே டாரஸ் மலைகளிலிருந்து தெற்கே தமஸ்கு வரையிலும் அதற்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எபிரெய மொழியில் அராம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பிற்பாடு சீரியா என்று அழைக்கப்பட்டது. அதில் குடியிருந்தவர்கள் சீரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதி 25:20; உபா 26:5; ஓசி 12:12).
☞ சீவான்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 3-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 9-ஆம் மாதம். இது மே பாதியில் ஆரம்பித்து ஜூன் பாதியில் முடிவடைந்தது. (எஸ்தர் 8:9).
☞ சீஸர்:
இது ரோமர்களின் குடும்பப் பெயராக இருந்தது, பிற்பாடு ரோமப் பேரரசர்களின் பட்டப்பெயராக ஆனது. அகஸ்து, திபேரியு, கிலவுதியு ஆகியோரின் பெயர்கள் வேதாகமத்தில் உள்ளன. நீரோவின் பெயர் வேதாகமத்தில் இல்லையென்றாலும் இந்தப் பட்டப்பெயர் அவருக்கும் பொருந்துகிறது. சில இடங்களில் வேதாகமத்தில், மனித ராஜியத்தைக் குறிப்பதற்கும் இந்தப் பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.(மாற் 12:17, அப் 25:12).






