பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சா, சி
☞ சாண்:
நீளத்தை அளப்பதற்கான அளவை. தோராயமாக, கையை விரிக்கும்போது கட்டை விரலின் நுனிக்கும் சுண்டு விரலின் நுனிக்கும் இடையிலுள்ள தூரத்துக்குச் சமம். 44.5 சென்டிமீட்டருள்ள முழத்தின் அடிப்படையில், ஒரு சாண் என்பது 22.2 சென்டிமீட்டர் நீளம் இருக்கலாம். (யாத் 28:16; 1 சாமு 17:4).
☞ சாத்தான்:
“எதிர்ப்பவன்” என்பது இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். வேதாகமத்தில் பிசாசாகிய சாத்தானைக் குறிக்கிறது. (யோபு 1:6; மத் 4:10; வெளி 12:9).
☞ சாம்பிராணி:
பாஸ்வெலியா இனத்தைச் சேர்ந்த சில குறிப்பிட்ட வகை மரங்களிலிருந்தும் புதர்ச்செடிகளிலிருந்தும் கிடைத்த காய்ந்த பிசின். இதை எரிக்கும்போது, நல்ல வாசனை வரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்ட பரிசுத்த தூபப்பொருளில் இதுவும் கலக்கப்பட்டிருந்தது. உணவுக் காணிக்கையோடு சேர்த்து இதுவும் கொடுக்கப்பட்டது. பரிசுத்த அறையில் வைக்கப்பட்டிருந்த படையல் ரொட்டிகளின் ஒவ்வொரு அடுக்கின்மீதும் இது தூவப்பட்டது. (யாத் 30:34-36; லேவி 2:1; 24:7; மத் 2:11).
☞ சாலொமோன் மண்டபம்:
இயேசுவின் காலத்தில், ஆலயத்தின் வெளிப்பிரகாரத்துக்குக் கிழக்கே இருந்த நடைபாதை; இதன்மீது கூரை போடப்பட்டிருந்தது. இது, முன்பு சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பாகமாக இருந்ததென பொதுவாக நம்பப்படுகிறது. ‘குளிர்காலத்தில்’ இயேசு இங்கே நடந்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக்காக இங்கே கூடினார்கள். (யோவா 10:22, 23; அப் 5:12).
☞ சியா.
ஒரு திட அளவை. திரவ அளவையான பாத்தின் அடிப்படையில், இது 7.33 லிட்டருக்குச் சமம். (2 இரா 7:1).
☞ சிர்ட்டிஸ்:
வட ஆப்பிரிக்காவில் இருக்கும் லீபியா நாட்டின் கடலோரத்தில் உள்ள ஆழமில்லாத இரண்டு பெரிய வளைகுடாக்கள். அவற்றில் இருந்த மணல்திட்டுகள், அலைகளால் இடம் மாறிக்கொண்டே இருந்ததால், பூர்வகால மாலுமிகள் அவற்றை நினைத்து பயப்பட்டார்கள். (அப் 27:17).
☞ சிவ்:
யூதர்களுடைய பரிசுத்த காலண்டரின்படி 2-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 8-ஆம் மாதம். இது ஏப்ரல் பாதியில் ஆரம்பித்து மே பாதியில் முடிவடைந்தது. பாபிலோன் சிறையிருப்புக்குப் பிறகு, யூத தால்முட்டிலும் மற்ற பதிவுகளிலும் இதன் பெயர் அய்யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (1 இரா 6:37).
☞ சிறைபிடிக்கப்படுதல்:
தேசத்தைக் கைப்பற்றியவரின் கட்டளைப்படி சொந்த தேசத்திலிருந்தோ வீட்டிலிருந்தோ வெளியேற்றப்படுவது. “புறப்படுதல்” என்பதுதான் இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். இஸ்ரவேலர்கள் இரண்டு தடவை சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் அசீரியர்களாலும், பிற்பாடு இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் பாபிலோனியர்களாலும் சிறைபிடிக்கப்பட்டார்கள். இந்த இரண்டு தொகுதியினரில் மீதி இருந்தவர்கள் பெர்சிய ராஜாவான கோரேசின் கட்டளைப்படி தங்கள் சொந்த தேசத்துக்கே திரும்ப அனுப்பப்பட்டார்கள். (2 இரா 17:6; 24:16; எஸ்றா 6:21).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக