வெள்ளி, 15 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ச



☞ சங்கீதம்:
கடவுளைப் புகழ்ந்து பாடும் பாட்டு. இசையோடு சேர்த்து மக்கள் இதைப் பாடினார்கள். எருசலேம் ஆலயத்தில் மக்கள் ஒன்றுகூடி கர்த்தரைத் தொழுதுக்கொண்டப் போது சங்கீதங்களைப் பாடினார்கள். (லூக் 20:43; அப் 13:33; யாக் 5:13).

☞ சடாமாஞ்சி எண்ணெய்:
இளஞ்சிவப்பு நிறமுள்ள விலை உயர்ந்த வாசனை எண்ணெய். சடாமாஞ்சி (நார்டோஸ்டாகிஸ் ஜட்டமான்ஸி) என்ற செடியிலிருந்து இது எடுக்கப்பட்டது. இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால், தரம் குறைந்த எண்ணெய்களோடு இது பெரும்பாலும் கலக்கப்பட்டது. சில சமயம், போலியான சடாமாஞ்சி எண்ணெய் விற்கப்பட்டது. ஆனால், இயேசுமீது ‘சுத்தமான சடாமாஞ்சி எண்ணெய்’ ஊற்றப்பட்டதென மாற்குவும் யோவானும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. (மாற் 14:3; யோவா 12:3).

☞ சதுசேயர்கள்:
யூத மதத்தின் பிரபலமான பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆலய நடவடிக்கைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வசதியான உயர்குடி மக்களும் குருமார்களும் இந்தப் பிரிவில் இருந்தார்கள். பரிசேயர்களுடைய வாய்மொழி பாரம்பரியங்களையும் மற்ற நம்பிக்கைகளையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவதூதர்கள், உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் நம்பவில்லை. இயேசுவை இவர்கள் எதிர்த்தார்கள். (மத் 16:1; அப் 23:8).

☞ சந்திப்புக் கூடாரம்:
இது மோசேயின் கூடாரத்தையும், முதன்முதலாக வனாந்தரத்தில் அமைக்கப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்தையும் குறிக்கிறது. (யாத் 33:7; 39:32).

☞ சபிப்பது:
ஓர் ஆளுக்கோ பொருளுக்கோ கெட்டது நடக்கும் என்று அறிவிப்பது அல்லது மிரட்டுவது. அசிங்கமாக அல்லது ஆவேசமாகக் கத்துவதை இது அர்த்தப்படுத்தாது. பெரும்பாலும், கெட்டது நடக்கப்போவதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக அல்லது முன்னறிவிப்பாக இது இருக்கிறது. கடவுளோ அவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரோ அதை அறிவிக்கும்போது, ஒரு தீர்க்கதரிசனத்துக்கு இருந்த மதிப்பையும் வலிமையையும் இது பெறுகிறது. (ஆதி 12:3; எண் 22:12; கலா 3:10).

☞ சபை:
ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக ஒன்றுகூடிய மக்கள் கூட்டம். எபிரெய வேதாகமத்தில், இது பொதுவாக இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது கிறிஸ்தவர்களுடைய தனித்தனி சபைகளைக் குறிக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சபையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (1 இரா 8:22; அப் 9:31; ரோ 16:5).

☞ சமாதான பலி:
கர்த்தருடன் சமாதான உறவை விரும்பியவர்கள் செலுத்திய பலி. இந்தப் பலியைக் கொண்டுவந்தவரும் அவருடைய குடும்பத்தாரும், இந்தப் பலியைச் செலுத்திய குருவும், அந்தச் சமயத்தில் அங்கே சேவை செய்த மற்ற குருமார்களும் அதைச் சாப்பிட்டார்கள். எரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து வந்த வாசனையை கர்த்தர் ஏற்றுக்கொண்டார். உயிருக்கு அடையாளமாக இருக்கிற இரத்தமும் கர்த்தருக்கே செலுத்தப்பட்டது. குருமார்களும் பலி செலுத்துபவர்களும் கர்த்தரோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதுபோல் இருந்தது. அவரோடு சமாதான உறவு இருப்பதை இது குறித்தது. (லேவி 7:29, 32; உபா 27:7).

☞ சமாரியர்கள்:
ஆரம்பத்தில், பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். கி.மு. 740-ல் அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றிய பின்பு, அவர்களால் இங்கே கொண்டுவரப்பட்ட மற்ற தேசத்தாரும் சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இயேசுவின் காலத்தில், “சமாரியர்கள்” என்ற பெயர், ஓர் இனத்தையோ தேசத்தையோ சேர்ந்தவர்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படவில்லை. பண்டைய சீகேமுக்கும் சமாரியாவுக்கும் அருகில் வாழ்ந்த ஒரு மதப்பிரிவினரையே குறித்தது. இவர்களுடைய சில நம்பிக்கைகள், யூத மத நம்பிக்கைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. (யோவா 8:48).

☞ சமாரியா:
சுமார் 200 வருஷங்களுக்கு இஸ்ரவேல் தேசத்துடைய பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகரமாக இது இருந்தது. அதோடு, அந்த ராஜ்யத்துக்குட்பட்ட பகுதி முழுவதும்கூட சமாரியா என்று அழைக்கப்பட்டது. சமாரியா மலைமேல் இந்த நகரம் கட்டப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில், வடக்கே கலிலேயாவுக்கும் தெற்கே யூதேயாவுக்கும் இடையிலிருந்த ரோம மாகாணம் சமாரியா என்று அழைக்கப்பட்டது. இயேசு, சில சமயங்களில் சமாரியா வழியாகப் போனார், இந்த நகரத்தாரிடம் பேசினார். சமாரியர்களுக்குக் பரிசுத்த ஆவியானவர் கிடைத்தபோது, பேதுரு கடவுளுடைய ராஜ்யத்தின் இரண்டாவது சாவியை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். (1 இரா 16:24; யோவா 4:7; அப் 8:14).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக