பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கொ, கோ
☞ கொம்பு:
இது மிருகங்களின் கொம்பைக் குறிக்கிறது. பானங்களை ஊற்றிக் குடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. எண்ணெய், மை, அழகு சாதனப் பொருள்கள் ஆகியவற்றை வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இசைக் கருவியாகவும் அறிவிப்பு செய்வதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. (1சா 16:1, 13; 1 இரா 1:39; எசே 9:2) பலம், வெற்றி, கைப்பற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதற்காக “கொம்பு” என்ற வார்த்தை பல தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. (உபா 33:17; மீகா 4:13; சக 1:19).
☞ கொழுந்தன்முறை கல்யாணம்:
திருச்சட்டத்தில் பிற்பாடு சேர்த்துக்கொள்ளப்பட்ட வழக்கம். ஆண் குழந்தை இல்லாமல் இறந்துபோன ஒருவனுக்கு வாரிசு உண்டாக்குவதற்காக அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் கல்யாணம் செய்துகொள்ளும் வழக்கம். (ஆதி 38:8; உபா 25:5).
☞ கொள்ளைநோய்:
மிக வேகமாகப் பரவி மாபெரும் அளவில் மரணத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு தொற்றுநோயும் கொள்ளைநோய்தான். பெரும்பாலும், கடவுள் கொடுக்கிற தண்டனையோடு இது சம்பந்தப்படுத்தப்படுகிறது. (எண் 14:12; எசே 38:22, 23; ஆமோ 4:10).
☞ கோமேதகம்:
கருப்பு, பழுப்பு, சிவப்பு, சாம்பல், பச்சை நிறங்களில் கிடைக்கிற விலைமதிப்புள்ள கல். இவற்றில் இடையிடையே வெள்ளை வரிகள் இருக்கும். தலைமைக் குருவின் விசேஷ உடைகளில் இது பொருத்தப்பட்டிருந்தது. (யாத் 28:9, 12; 1 நாளா 29:2; யோபு 28:16).
☞ கோர்:
திடப்பொருள்களையும் திரவப்பொருள்களையும் அளக்கும் அளவை. இது 220 லிட்டருக்குச் சமம். இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (1 இரா 5:11).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக