வெள்ளி, 29 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சீ




☞ சீயுஸ்:
கிரேக்கர்கள் வழிபட்ட ஏராளமான தெய்வங்களில் இது மிக முக்கியமான தெய்வம். லீஸ்திராவில் இருந்த மக்கள் பர்னபாவை சீயுஸ் என்று தவறாக நினைத்தார்கள். லீஸ்திராவுக்குப் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகளில், “சீயுசின் பூசாரிகள்,” “சூரியக் கடவுளாகிய சீயுஸ்” ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. மெலித்தா தீவிலிருந்து பவுல் பயணம் செய்த கப்பலின் முன்பகுதியில் “சீயுசின் மகன்களுடைய” சின்னங்கள், அதாவது, இரட்டைச் சகோதரர்களான கேஸ்டர் மற்றும் போலக்ஸின் சின்னங்கள் இருந்தன. (அப் 14:12; 28:11).

☞ சீயோன்; சீயோன் மலை:
எபூசியர்களின் கோட்டை நகரமாகிய எபூசுவின் பெயர்தான் சீயோன். இது எருசலேமின் தென்கிழக்கு மலைமீது இருந்தது. தாவீது இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்பு, இங்கே தன் அரண்மனையைக் கட்டினார். இது “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. (2சா 5:7, 9) உடன்படிக்கைப் பெட்டியை தாவீது சீயோனுக்குக் கொண்டுவந்த பின்பு, இந்த மலை கர்த்தருக்குப் பரிசுத்தமான மலையாக ஆனது. பிற்பாடு, இந்தப் பெயர் மோரியா மலைமீது இருந்த ஆலயப் பகுதியையும், சில சமயங்களில், எருசலேம் நகரம் முழுவதையும் குறித்தது. சில இடங்களில் வேதாகமத்தில், இந்தப் பெயர் பெரும்பாலும் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (சங் 2:6; 1 பேது 2:6; வெளி 14:1).

☞ சீரியா; சீரியர்கள்/அராம்; அரமேயர்கள்:
இவர்கள் சேமின் மகனாகிய அராமின் வம்சத்தில் வந்தவர்கள். லீபனோன் மலைகளிலிருந்து மெசொப்பொத்தாமியா வரையுள்ள பகுதிகளிலும், வடக்கே டாரஸ் மலைகளிலிருந்து தெற்கே தமஸ்கு வரையிலும் அதற்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எபிரெய மொழியில் அராம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பிற்பாடு சீரியா என்று அழைக்கப்பட்டது. அதில் குடியிருந்தவர்கள் சீரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதி 25:20; உபா 26:5; ஓசி 12:12).

☞ சீவான்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 3-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 9-ஆம் மாதம். இது மே பாதியில் ஆரம்பித்து ஜூன் பாதியில் முடிவடைந்தது. (எஸ்தர் 8:9).

☞ சீஸர்:
இது ரோமர்களின் குடும்பப் பெயராக இருந்தது, பிற்பாடு ரோமப் பேரரசர்களின் பட்டப்பெயராக ஆனது. அகஸ்து, திபேரியு, கிலவுதியு ஆகியோரின் பெயர்கள் வேதாகமத்தில் உள்ளன. நீரோவின் பெயர் வேதாகமத்தில் இல்லையென்றாலும் இந்தப் பட்டப்பெயர் அவருக்கும் பொருந்துகிறது. சில இடங்களில் வேதாகமத்தில், மனித ராஜியத்தைக் குறிப்பதற்கும் இந்தப் பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.(மாற் 12:17, அப் 25:12).

வெள்ளி, 22 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சா, சி



☞ சாண்:
நீளத்தை அளப்பதற்கான அளவை. தோராயமாக, கையை விரிக்கும்போது கட்டை விரலின் நுனிக்கும் சுண்டு விரலின் நுனிக்கும் இடையிலுள்ள தூரத்துக்குச் சமம். 44.5 சென்டிமீட்டருள்ள முழத்தின் அடிப்படையில், ஒரு சாண் என்பது 22.2 சென்டிமீட்டர் நீளம் இருக்கலாம். (யாத் 28:16; 1 சாமு 17:4).

☞ சாத்தான்:
“எதிர்ப்பவன்” என்பது இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். வேதாகமத்தில் பிசாசாகிய சாத்தானைக் குறிக்கிறது. (யோபு 1:6; மத் 4:10; வெளி 12:9).

☞ சாம்பிராணி:
பாஸ்வெலியா இனத்தைச் சேர்ந்த சில குறிப்பிட்ட வகை மரங்களிலிருந்தும் புதர்ச்செடிகளிலிருந்தும் கிடைத்த காய்ந்த பிசின். இதை எரிக்கும்போது, நல்ல வாசனை வரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்ட பரிசுத்த தூபப்பொருளில் இதுவும் கலக்கப்பட்டிருந்தது. உணவுக் காணிக்கையோடு சேர்த்து இதுவும் கொடுக்கப்பட்டது. பரிசுத்த அறையில் வைக்கப்பட்டிருந்த படையல் ரொட்டிகளின் ஒவ்வொரு அடுக்கின்மீதும் இது தூவப்பட்டது. (யாத் 30:34-36; லேவி 2:1; 24:7; மத் 2:11).

☞ சாலொமோன் மண்டபம்:
இயேசுவின் காலத்தில், ஆலயத்தின் வெளிப்பிரகாரத்துக்குக் கிழக்கே இருந்த நடைபாதை; இதன்மீது கூரை போடப்பட்டிருந்தது. இது, முன்பு சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பாகமாக இருந்ததென பொதுவாக நம்பப்படுகிறது. ‘குளிர்காலத்தில்’ இயேசு இங்கே நடந்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக்காக இங்கே கூடினார்கள். (யோவா 10:22, 23; அப் 5:12).

☞ சியா.
ஒரு திட அளவை. திரவ அளவையான பாத்தின் அடிப்படையில், இது 7.33 லிட்டருக்குச் சமம். (2 இரா 7:1).

☞ சிர்ட்டிஸ்:
வட ஆப்பிரிக்காவில் இருக்கும் லீபியா நாட்டின் கடலோரத்தில் உள்ள ஆழமில்லாத இரண்டு பெரிய வளைகுடாக்கள். அவற்றில் இருந்த மணல்திட்டுகள், அலைகளால் இடம் மாறிக்கொண்டே இருந்ததால், பூர்வகால மாலுமிகள் அவற்றை நினைத்து பயப்பட்டார்கள். (அப் 27:17).

☞ சிவ்:
யூதர்களுடைய பரிசுத்த காலண்டரின்படி 2-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 8-ஆம் மாதம். இது ஏப்ரல் பாதியில் ஆரம்பித்து மே பாதியில் முடிவடைந்தது. பாபிலோன் சிறையிருப்புக்குப் பிறகு, யூத தால்முட்டிலும் மற்ற பதிவுகளிலும் இதன் பெயர் அய்யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (1 இரா 6:37).

☞ சிறைபிடிக்கப்படுதல்:
தேசத்தைக் கைப்பற்றியவரின் கட்டளைப்படி சொந்த தேசத்திலிருந்தோ வீட்டிலிருந்தோ வெளியேற்றப்படுவது. “புறப்படுதல்” என்பதுதான் இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். இஸ்ரவேலர்கள் இரண்டு தடவை சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் அசீரியர்களாலும், பிற்பாடு இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் பாபிலோனியர்களாலும் சிறைபிடிக்கப்பட்டார்கள். இந்த இரண்டு தொகுதியினரில் மீதி இருந்தவர்கள் பெர்சிய ராஜாவான கோரேசின் கட்டளைப்படி தங்கள் சொந்த தேசத்துக்கே திரும்ப அனுப்பப்பட்டார்கள். (2 இரா 17:6; 24:16; எஸ்றா 6:21).

செவ்வாய், 19 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ பதிவு இல. 12

(எரிகோ)


யோசுவா 6:10-15, 20 சொல்கிறபடி இஸ்ரவேல் படை வீரர்கள் எரிகோ நகரத்தை தினமும் ஒரு முறை 6 நாட்களுக்குச் சுற்றி வந்தார்கள். 7-வது நாள் 7 தடவை சுற்றி வந்தார்கள். பிறகு, எரிகோவின் பலமான சுவர்களை கடவுள் விழ வைத்தார்; உடனே, இஸ்ரவேலர்கள் எரிகோவைக் கைப்பற்றினார்கள். பைபிள் சொல்வதுபோல் ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது.

வேதாகம காலங்களில் எதிரிகள் ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதற்காக அதை முற்றுகை போடுவார்கள். அந்த நகரம் ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்பட்டிருந்தால் அங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சேமித்து வைத்த உணவைச் சாப்பிடுவார்கள். கடைசியில் எதிரிகள் அந்த நகரத்தைக் கைப்பற்றும்போது அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், மீதியிருக்கும் உணவு உட்பட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போவார்கள். பாலஸ்தீனாவில் இருந்த நகரங்கள் இதுபோல் கைப்பற்றப்பட்டபோது அங்கிருந்த இடிபாடுகளில் கொஞ்சம் உணவு மட்டும் இருந்ததை அல்லது உணவே இல்லாமல் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எரிகோவின் இடிபாடுகளில் அப்படி இல்லை. பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ இப்படிச் சொல்கிறது: ‘அந்த நகரம் அழிக்கப்பட்ட பிறகு அங்கு நிறைய மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு, நிறைய தானியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தளவு அதிகமான தானியங்களைப் பார்ப்பது ரொம்ப அபூர்வம்!’

இஸ்ரவேலர்கள் எரிகோவிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்ததால் அவர்கள் அங்கிருந்து எந்த உணவையும் எடுத்துக்கொண்டு வரவில்லை என்று வேதாகமம் சொல்கிறது. (யோசு. 6:17, 18) எரிகோவில் நிறைய தானியங்கள் இருந்த காலத்தில்தான், அதாவது அறுவடை காலத்துக்குப் பிறகு அந்த வருஷத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான், இஸ்ரவேலர்கள் எரிகோவைத் தாக்கினார்கள். (யோசு. 3:15-17; 5:10) எரிகோவைக் கைப்பற்றிய பிறகும் நிறைய தானியங்கள் இருந்தன. அதை வைத்துப் பார்க்கும்போது, வேதாகமம் சொல்கிறபடி ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது!

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ச



☞ சங்கீதம்:
கடவுளைப் புகழ்ந்து பாடும் பாட்டு. இசையோடு சேர்த்து மக்கள் இதைப் பாடினார்கள். எருசலேம் ஆலயத்தில் மக்கள் ஒன்றுகூடி கர்த்தரைத் தொழுதுக்கொண்டப் போது சங்கீதங்களைப் பாடினார்கள். (லூக் 20:43; அப் 13:33; யாக் 5:13).

☞ சடாமாஞ்சி எண்ணெய்:
இளஞ்சிவப்பு நிறமுள்ள விலை உயர்ந்த வாசனை எண்ணெய். சடாமாஞ்சி (நார்டோஸ்டாகிஸ் ஜட்டமான்ஸி) என்ற செடியிலிருந்து இது எடுக்கப்பட்டது. இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால், தரம் குறைந்த எண்ணெய்களோடு இது பெரும்பாலும் கலக்கப்பட்டது. சில சமயம், போலியான சடாமாஞ்சி எண்ணெய் விற்கப்பட்டது. ஆனால், இயேசுமீது ‘சுத்தமான சடாமாஞ்சி எண்ணெய்’ ஊற்றப்பட்டதென மாற்குவும் யோவானும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. (மாற் 14:3; யோவா 12:3).

☞ சதுசேயர்கள்:
யூத மதத்தின் பிரபலமான பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆலய நடவடிக்கைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வசதியான உயர்குடி மக்களும் குருமார்களும் இந்தப் பிரிவில் இருந்தார்கள். பரிசேயர்களுடைய வாய்மொழி பாரம்பரியங்களையும் மற்ற நம்பிக்கைகளையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவதூதர்கள், உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் நம்பவில்லை. இயேசுவை இவர்கள் எதிர்த்தார்கள். (மத் 16:1; அப் 23:8).

☞ சந்திப்புக் கூடாரம்:
இது மோசேயின் கூடாரத்தையும், முதன்முதலாக வனாந்தரத்தில் அமைக்கப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்தையும் குறிக்கிறது. (யாத் 33:7; 39:32).

☞ சபிப்பது:
ஓர் ஆளுக்கோ பொருளுக்கோ கெட்டது நடக்கும் என்று அறிவிப்பது அல்லது மிரட்டுவது. அசிங்கமாக அல்லது ஆவேசமாகக் கத்துவதை இது அர்த்தப்படுத்தாது. பெரும்பாலும், கெட்டது நடக்கப்போவதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக அல்லது முன்னறிவிப்பாக இது இருக்கிறது. கடவுளோ அவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரோ அதை அறிவிக்கும்போது, ஒரு தீர்க்கதரிசனத்துக்கு இருந்த மதிப்பையும் வலிமையையும் இது பெறுகிறது. (ஆதி 12:3; எண் 22:12; கலா 3:10).

☞ சபை:
ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக ஒன்றுகூடிய மக்கள் கூட்டம். எபிரெய வேதாகமத்தில், இது பொதுவாக இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது கிறிஸ்தவர்களுடைய தனித்தனி சபைகளைக் குறிக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சபையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (1 இரா 8:22; அப் 9:31; ரோ 16:5).

☞ சமாதான பலி:
கர்த்தருடன் சமாதான உறவை விரும்பியவர்கள் செலுத்திய பலி. இந்தப் பலியைக் கொண்டுவந்தவரும் அவருடைய குடும்பத்தாரும், இந்தப் பலியைச் செலுத்திய குருவும், அந்தச் சமயத்தில் அங்கே சேவை செய்த மற்ற குருமார்களும் அதைச் சாப்பிட்டார்கள். எரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து வந்த வாசனையை கர்த்தர் ஏற்றுக்கொண்டார். உயிருக்கு அடையாளமாக இருக்கிற இரத்தமும் கர்த்தருக்கே செலுத்தப்பட்டது. குருமார்களும் பலி செலுத்துபவர்களும் கர்த்தரோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதுபோல் இருந்தது. அவரோடு சமாதான உறவு இருப்பதை இது குறித்தது. (லேவி 7:29, 32; உபா 27:7).

☞ சமாரியர்கள்:
ஆரம்பத்தில், பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். கி.மு. 740-ல் அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றிய பின்பு, அவர்களால் இங்கே கொண்டுவரப்பட்ட மற்ற தேசத்தாரும் சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இயேசுவின் காலத்தில், “சமாரியர்கள்” என்ற பெயர், ஓர் இனத்தையோ தேசத்தையோ சேர்ந்தவர்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படவில்லை. பண்டைய சீகேமுக்கும் சமாரியாவுக்கும் அருகில் வாழ்ந்த ஒரு மதப்பிரிவினரையே குறித்தது. இவர்களுடைய சில நம்பிக்கைகள், யூத மத நம்பிக்கைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. (யோவா 8:48).

☞ சமாரியா:
சுமார் 200 வருஷங்களுக்கு இஸ்ரவேல் தேசத்துடைய பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகரமாக இது இருந்தது. அதோடு, அந்த ராஜ்யத்துக்குட்பட்ட பகுதி முழுவதும்கூட சமாரியா என்று அழைக்கப்பட்டது. சமாரியா மலைமேல் இந்த நகரம் கட்டப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில், வடக்கே கலிலேயாவுக்கும் தெற்கே யூதேயாவுக்கும் இடையிலிருந்த ரோம மாகாணம் சமாரியா என்று அழைக்கப்பட்டது. இயேசு, சில சமயங்களில் சமாரியா வழியாகப் போனார், இந்த நகரத்தாரிடம் பேசினார். சமாரியர்களுக்குக் பரிசுத்த ஆவியானவர் கிடைத்தபோது, பேதுரு கடவுளுடைய ராஜ்யத்தின் இரண்டாவது சாவியை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். (1 இரா 16:24; யோவா 4:7; அப் 8:14).

செவ்வாய், 12 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ பதிவு இல. 11

(புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சீலோவாம் குளம்)



மண்ணைக் குழைத்து சேறுண்டாக்கி பார்வையற்ற ஒருவனுடைய கண்களில் இயேசு பூசினார். அதன்பின், “நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். அப்படியே அவன் போய்க் கழுவி, “பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.” (யோவான் 9:6, 7) இந்தக் குளத்தைக் குறித்து சமீபத்திய புதைபொருள் ஆராய்ச்சியின்மூலம் புதிய தகவல் கிடைத்திருக்கிறது.

எருசலேம் நகரத்தில் சீலோவாம் குளம் என அழைக்கப்படுகிற ஒரு சுற்றுலாத் தலம் உள்ளது. அநேக சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்வையிட்டிருக்கிறார்கள். யோவான் 9:7-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள குளம் இதுவே என அவர்கள் நினைக்கிறார்கள். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் எசேக்கியா ராஜாவால் கட்டப்பட்ட 530 மீட்டர் நீளமுள்ள தண்ணீர்ச் சுரங்கத்தின் கடைமுனையில் இது அமைந்துள்ளது. இந்தக் குளம் உண்மையில் கி.மு. நான்காம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டது. இதைக் கட்டிய பைஸாண்டிய “கிறிஸ்தவர்கள்,” யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீலோவாம் குளம் இந்த இடத்தில்தான் இருந்திருக்குமெனத் தவறாக நினைத்துக்கொண்டார்கள்.

என்றாலும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் 2004-⁠ல் ஒரு குளத்தைக் கண்டுபிடித்தார்கள். இதுவே இயேசு பூமியில் வாழ்ந்தபோது அமைந்திருந்த நிஜமான சீலோவாம் குளமாக இருந்திருக்குமென்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தக் குளம், தற்போது சீலோவாம் குளம் எனத் தவறுதலாக அழைக்கப்படுகிற இடத்திற்குத் தென்கிழக்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த கழிவுநீர்க் குழாயில் பழுதுபார்க்கும் பணி நடைபெற வேண்டியிருந்ததால் அரசு அதிகாரிகள் கனரக இயந்திரங்களுடன் பணியாட்களை அங்கே அனுப்பி வைத்தார்கள். தோண்டும் வேலை நடைபெற்றபோது, அதற்கு அருகே பணிபுரிந்த ஒரு புதைபொருள் ஆய்வாளர் அதைக் கவனித்துக்கொண்டே இருந்தார். அவருடைய கண்களில் இரண்டு படிக்கட்டுகள் தென்பட்டன. பழுதுபார்க்கும் பணி அத்தோடு நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள இஸ்ரேல் நாட்டு புதைபொருள் ஆராய்ச்சித்துறை அனுமதி அளித்தது. சுமார் 70 மீட்டர் நீளமாய் இருந்த அந்தக் குளத்தின் ஒரு பக்கமும், அதன் இரு முனைகளும் இப்போது தோண்டப்பட்டுவிட்டன.

குளத்தைத் தோண்டியபோது சில நாணயங்களும் கிடைத்தன. இவை, ரோம அரசுக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்த இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளின்போது புழக்கத்தில் இருந்தவை. இந்தக் கலகம் கிறிஸ்து வருடம் 66-⁠க்கும் 70-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது. கிறிஸ்து வருடம் 70-⁠ஆம் ஆண்டுவரை இந்தக் குளம் அப்பகுதியிலுள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்ததை அந்த நாணயங்கள் காட்டுகின்றன. அந்த வருடத்தில்தான் ரோமர்கள் எருசலேமைக் கைப்பற்றி அதைச் சிதைத்துச் சீரழித்திருந்தார்கள். பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகை இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது: “ஆகவே, கலகம் ஓயும் வரையில் இந்தக் குளம் மக்களால் பயன்படுத்தப்பட்டது; அதன்பின்னர் உபயோகிக்காமல் அப்படியே விடப்பட்டது. பைஸாண்டிய ஆட்சிக்காலம் வரையில் யாரும் இங்கே மீண்டும் குடியேறவில்லை. எருசலேமிலேயே இந்தப் பகுதிதான் மிகத் தாழ்வான பகுதியாய் இருந்தது. ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தில் பெய்த மழை காரணமாகப் பள்ளத்தாக்கின் வழியாகப் பாய்ந்தோடிய நீர், சேற்றையும் சகதியையும் இந்தக் குளத்தில் அடுக்கடுக்காய்ப் படிய வைத்தது. ரோமரால் எருசலேம் அழிக்கப்பட்டதால் இந்தக் குளம் தூர் வாரப்படாமல் பாழாய்க் கிடந்தது. இப்படிப் பல நூற்றாண்டுகளாக அடுக்கடுக்காய்ப் படிந்த சகதியால் இந்தக் குளம் ‘படிப்படியாய்’ மறைந்து இறுதியில் தடம்தெரியாமலே போய்விட்டது. அவ்வாறு படிந்திருந்த சகதியைத் தோண்டிய பிறகுதான், அதுவும் சில இடங்களில் கிட்டத்தட்ட 3 மீட்டர் ஆழத்திற்குத் தோண்டிய பிறகுதான் இந்தக் குளம் தட்டுப்பட்டது.”

சீலோவாம் குளத்தின் நிஜமான இருப்பிடத்தைக் கண்டறிந்தது வேதாகமத்தை படிப்பவர்களுக்கு, முதல் நூற்றாண்டிலிருந்த எருசலேம் நகரத்தின் நிலவியல் குறிப்புகள் இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் விவரிக்கும் சுவிசேஷப் பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவதால் அதை நன்கு புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கொ, கோ



☞ கொம்பு:
இது மிருகங்களின் கொம்பைக் குறிக்கிறது. பானங்களை ஊற்றிக் குடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. எண்ணெய், மை, அழகு சாதனப் பொருள்கள் ஆகியவற்றை வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இசைக் கருவியாகவும் அறிவிப்பு செய்வதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. (1சா 16:1, 13; 1 இரா 1:39; எசே 9:2) பலம், வெற்றி, கைப்பற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதற்காக “கொம்பு” என்ற வார்த்தை பல தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. (உபா 33:17; மீகா 4:13; சக 1:19).

☞ கொழுந்தன்முறை கல்யாணம்:
திருச்சட்டத்தில் பிற்பாடு சேர்த்துக்கொள்ளப்பட்ட வழக்கம். ஆண் குழந்தை இல்லாமல் இறந்துபோன ஒருவனுக்கு வாரிசு உண்டாக்குவதற்காக அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் கல்யாணம் செய்துகொள்ளும் வழக்கம். (ஆதி 38:8; உபா 25:5).

☞ கொள்ளைநோய்:
மிக வேகமாகப் பரவி மாபெரும் அளவில் மரணத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு தொற்றுநோயும் கொள்ளைநோய்தான். பெரும்பாலும், கடவுள் கொடுக்கிற தண்டனையோடு இது சம்பந்தப்படுத்தப்படுகிறது. (எண் 14:12; எசே 38:22, 23; ஆமோ 4:10).

☞ கோமேதகம்:
கருப்பு, பழுப்பு, சிவப்பு, சாம்பல், பச்சை நிறங்களில் கிடைக்கிற விலைமதிப்புள்ள கல். இவற்றில் இடையிடையே வெள்ளை வரிகள் இருக்கும். தலைமைக் குருவின் விசேஷ உடைகளில் இது பொருத்தப்பட்டிருந்தது. (யாத் 28:9, 12; 1 நாளா 29:2; யோபு 28:16).

☞ கோர்:
திடப்பொருள்களையும் திரவப்பொருள்களையும் அளக்கும் அளவை. இது 220 லிட்டருக்குச் சமம். இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (1 இரா 5:11).

வெள்ளி, 1 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கூ - கை



☞ கூடாரப் பண்டிகை:
சேகரிப்புப் பண்டிகை என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகை, ஏத்தானீம் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிவரை நடந்தது. இஸ்ரவேலர்களின் விவசாய வருடத்தின் முடிவில் அறுவடைக்குப் பிறகு இது கொண்டாடப்பட்டது. தங்களுடைய விளைச்சலை ஆசீர்வதித்ததற்காக கர்த்தருக்கு நன்றி சொல்லவும், சந்தோஷமாக இருக்கவும் இஸ்ரவேலர்கள் இதைக் கொண்டாடினார்கள். எகிப்திலிருந்து விடுதலையானதை நினைத்துப் பார்ப்பதற்காக, இந்தச் சமயத்தில் ஜனங்கள் கூடாரங்களில், அதாவது பந்தல்போட்ட இடங்களில், தங்கினார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆண்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டாட வேண்டியிருந்த மூன்று பண்டிகைகளில் இதுவும் ஒன்று. (லேவி 23:34; எஸ்றா 3:4).

☞ கேப்:
1.22 லிட்டருக்குச் சமமான திட அளவை. இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (2இரா 6:25).

☞ கேமோஷ்:
மோவாபியர்களின் முக்கியத் தெய்வம். (1இரா 11:33).

☞ கேரா:
0.57 கிராமுக்குச் சமமான ஓர் எடை. ஒரு சேக்கலில், 20-ல் ஒரு பங்கு. (லேவி 27:25)

☞ கேருபீன்கள்:
விசேஷப் பொறுப்புகளைப் பெற்று, உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற தேவதூதர்கள். சேராபீன்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. (ஆதி 3:24; யாத் 25:20; ஏசா 37:16; எபி 9:5).

☞ கைகளை வைத்தல்:
ஒருவரை விசேஷமான வேலைக்கு நியமிக்கும்போது அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. அதோடு, ஒருவரை ஆசீர்வதிக்கவும் குணப்படுத்தவும் கடவுளுடைய சக்தியின் வரத்தைக் கொடுக்கவும் அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. சில சமயங்களில், மிருகங்களைப் பலி கொடுப்பதற்கு முன்பு அவற்றின் மீது கைகள் வைக்கப்பட்டன. (யாத் 29:15; எண் 27:18; அப் 19:6; 1தீ 5:22).

வெள்ளி, 24 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கு



☞ கும்பம்:
ஒரு தூணின் உச்சியில் வேலைப்பாடுகளுடன் அமைந்த பகுதி. சாலொமோனுடைய ஆலயத்தின் முன்னால் யாகீன், போவாஸ் என்ற இரண்டு தூண்கள் இருந்தன. (1 இரா. 7:16)

☞ குயவர்:
மண் பானைகளையும் மற்ற மண் பாத்திரங்களையும் செய்பவர். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “உருவாக்குபவர்” என்று அர்த்தம். களிமண்மீது குயவருக்கு இருக்கிற அதிகாரத்தைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. மக்களையும் தேசங்களையும் ஆட்சி செய்கிற உரிமை கர்த்தருக்கு இருக்கிறது என்பதை விளக்குவதற்கு வேதாகமம் பெரும்பாலும் இந்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறது. (ஏசா 64:8; ரோ 9:21).

☞ குலதெய்வச் சிலைகள்:
சில சமயங்களில், குறி கேட்பதற்காக இவை பயன்படுத்தப்பட்டன. (எசே 21:21) சில சிலைகள், உருவத்திலும் உயரத்திலும் மனிதனைப் போல் இருந்தன. மற்ற சிலைகளோ, சிறியவையாக இருந்தன. (ஆதி 31:34; 1சா 19:13, 16) இந்தச் சிலைகளை வைத்திருந்தவருக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தது என்பதை மெசொப்பொத்தாமியாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. (ராகேல் தன் அப்பாவிடமிருந்து குலதெய்வச் சிலையை எடுத்ததற்கான காரணம் இதிலிருந்து புரிகிறது.) ஆனால், இஸ்ரவேலில் இந்த வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. நியாயாதிபதிகளின் காலத்திலும், ராஜாக்களின் காலத்திலும் குலதெய்வச் சிலைகளை மக்கள் வழிபட்டார்கள்; உண்மையுள்ள ராஜாவான யோசியா, மற்ற பொருள்களோடு சேர்த்து குலதெய்வச் சிலைகளையும் அழித்துப்போட்டார். (நியா 17:5; 2ரா 23:24; ஓசி 3:4).

☞ குலுக்கல்:
தீர்மானங்களை எடுப்பதற்காகக் குலுக்கல் போடப்பட்டது. கூழாங்கற்கள், சிறிய மரத்துண்டுகள் அல்லது கற்கள் ஆகியவை குலுக்கிப் போடப்பட்டன. உடையின் மடிப்புகளில் அல்லது பாத்திரங்களில் போடப்பட்டு பின்பு குலுக்கப்பட்டன. அதிலிருந்து வெளியே வந்து விழுந்த அல்லது வெளியே எடுக்கப்பட்ட ஒன்றுதான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஜெபத்துக்குப் பின்புதான் பெரும்பாலும் குலுக்கல் போடப்பட்டது. “குலுக்கல்” என்பதற்கான மூலமொழி வார்த்தைக்கு, “பங்கு” அல்லது “சொத்து” என்ற அர்த்தங்களும் உள்ளன. (யோசு 14:2; சங் 16:5; நீதி 16:33; மத் 27:35).

☞ குற்ற நிவாரண பலி:
தான் செய்த பாவங்களுக்காக ஒருவர் செலுத்தும் பலி. இது மற்ற பாவப் பரிகார பலிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. பாவம் செய்ததால் இழந்துவிட்ட சில ஒப்பந்த உரிமைகளை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காகவும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்காகவும், மனம் திருந்திய ஒருவர் செலுத்துகிற பலி. (லேவி 7:37; 19:21, 22; ஏசா 53:10).

வெள்ளி, 17 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கா, கி, கீ



☞ காவல்காரர்:
முக்கியமாக, ராத்திரி நேரத்தில் மக்களையும் உடைமைகளையும் பாதுகாப்பவர். ஆபத்து வருவதைப் பார்த்தால் மற்றவர்களை எச்சரிப்பார். நகரத்தை நோக்கி வருபவர்களைத் தூரத்திலேயே பார்ப்பதற்கு வசதியாக, இவர் பெரும்பாலும் நகரத்து மதில்களில் அல்லது கோபுரங்களில் நிறுத்தப்பட்டார். படைப்பிரிவில் இருந்த காவல்காரர், காவலாளி என்றும் படைக்காவலர் என்றும் அழைக்கப்படுகிறார். தீர்க்கதரிசிகள் அடையாள அர்த்தத்தில் இஸ்ரவேல் தேசத்துக்குக் காவல்காரர்களாக இருந்து, வரப்போகிற அழிவைப் பற்றி எச்சரித்தார்கள். (2 இரா 9:20; எசே 3:17).

☞ கானான்:
நோவாவின் பேரன்; காமின் நான்காவது மகன். கானானின் வம்சத்தில் வந்த 11 கோத்திரத்தார் காலப்போக்கில் மத்தியதரைக் கடலின் கிழக்கே, எகிப்துக்கும் சீரியாவுக்கும் இடையிலுள்ள பகுதியில் குடியிருந்தார்கள். இந்தப் பகுதிதான் ‘கானான் தேசம்’ என்று அழைக்கப்பட்டது. (லேவி 18:3; ஆதி 9:18; அப் 13:19).

☞ கித்தீத்:
இசை சம்பந்தப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியவில்லை. காத் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கலாம். இந்த வார்த்தை திராட்சரச ஆலையைக் குறிக்கிறது. அதனால், கித்தீத் என்ற வார்த்தை திராட்சமது தயாரிக்கப்பட்ட சமயத்தில் பாடப்பட்ட பாடல்களின் இசையாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். (சங் 81).

☞ கிரேக்கர்கள்:
கிரேக்கு தேசத்தில் பிறந்தவர்கள் அல்லது கிரேக்கு தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். யூதரல்லாத மக்களையும், கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் இருந்தவர்களையும்கூட கிரேக்கர்கள் என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சொல்கிறது. (யோவே 3:6; யோவா 12:20).

☞ கிரேக்கு:
கிரேக்கு தேசத்து மக்கள் பேசும் மொழி.

☞ கிறிஸ்தவர்கள்:
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள். (அப் 11:26; 26:28).

☞ கிறிஸ்து:
இயேசுவின் பட்டப்பெயர். இது கிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கான எபிரெய வார்த்தை, “மேசியா,” அதாவது “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. (மத் 1:16; யோவா 1:41).

☞ கிஸ்லே:
யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பின்பு பயன்படுத்திய பரிசுத்த காலண்டரின்படி 9-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 3-ஆம் மாதம். இது நவம்பர் பாதியில் ஆரம்பித்து டிசம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 1:1; சக 7:1).

☞ கீலேயாத்:
யோர்தான் ஆற்றின் கிழக்கே, யாபோக் பள்ளத்தாக்கின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிவரை பரந்து விரிந்திருந்த செழிப்பான இடம்தான் கீலேயாத். ஆனால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் குடியிருந்த இஸ்ரவேல் பகுதி முழுவதையும் குறிப்பதற்காகக்கூட இந்த வார்த்தை சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எண் 32:1; யோசு 12:2; 2ரா 10:33).

வெள்ளி, 10 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ க


☞ கடைசி நாட்கள்:
வரலாற்றுச் சம்பவங்கள் உச்சக்கட்டத்தை அடையும் சமயத்தைக் குறிப்பதற்காக வேதாகம தீர்க்கதரிசனங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. (எசே 38:16; தானி 10:14; அப் 2:17) கடைசி நாட்கள் என்பது சில வருஷங்களையோ பல வருஷங்களையோ குறிக்கலாம், இது அந்தந்த தீர்க்கதரிசனத்தைப் பொறுத்தே இருக்கிறது. முக்கியமாக, இந்தச் சகாப்தத்தின் ‘கடைசி நாட்களை’ குறிப்பதற்கு இந்த வார்த்தைகளை வேதாகமம் பயன்படுத்துகிறது. இது இயேசு கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் சமயமாக இருக்கிறது. (2 தீ 3:1; யாக் 5:3; 2 பேதுரு 3:3).

☞ கண்காணி:
சபையை வழிநடத்தி, அதை நன்றாகக் கவனித்துக்கொள்கிற ஆண்; இது அவருடைய மிக முக்கியப் பொறுப்பு. பாதுகாப்பான மேற்பார்வை என்ற அர்த்தத்தைத் தரும் எப்பிஸ்கோபஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை வந்திருக்கிறது. கிறிஸ்தவ சபையில், “கண்காணி,” “மூப்பர்” (பிரஸ்பிட்டிரோஸ்) ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கின்றன. “மூப்பர்” என்ற வார்த்தை, நியமிக்கப்பட்டவருக்கு இருக்கிற முதிர்ச்சியான குணங்களைச் சுட்டிக்காட்டுகிறது. “கண்காணி” என்ற வார்த்தை நியமிக்கப்பட்டவரின் கடமைகளைச் சுட்டிக்காட்டுகிறது. (அப் 20:28; 1தீ 3:2-7; 1 பேது 5:2).

☞ கதிர் பொறுக்குதல்:
அறுவடை செய்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ விட்டுவிடும் கதிர்களை மற்றவர்கள் சேகரிக்கிற ஒரு வழக்கம். அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் இருக்கிற கதிர்களை முழுமையாக அறுக்கக் கூடாது என்றும், ஒலிவப் பழங்களையும், திராட்சைப் பழங்களையும் முழுமையாக அறுவடை செய்யக் கூடாது என்றும் திருச்சட்டம் கட்டளையிட்டிருந்தது. அறுவடைக்குப் பிறகு மீதியாக இருப்பதை எடுத்துக்கொள்கிற உரிமையை ஏழைகளுக்கும், பாவப்பட்டவர்களுக்கும், வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கடவுள் கொடுத்திருந்தார். (ரூத் 2:7).

☞ கப்பம்:
ஓர் அரசாங்கம் அல்லது ஓர் ஆட்சியாளர் வேறொரு அரசாங்கத்துக்கு அல்லது ஆட்சியாளருக்கு அடிபணிவதைக் காட்டுவதற்காகவோ, அவரோடு சமாதானமாக இருப்பதற்காகவோ அவருடைய பாதுகாப்பைப் பெறுவதற்காகவோ செலுத்துகிற பணம் அல்லது பொருள். (2 ராஜா 3:4; 18:14-16; 2 நாளா 17:11) தனி நபர்கள்மீது விதிக்கப்படுகிற வரியையும் இது குறிக்கிறது. (நெகே 5:4, ரோமர் 13:7).

☞ கரண்டிகள்:
தங்கம், வெள்ளி அல்லது செம்பால் இவை செய்யப்பட்டிருந்தன. வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் தூபப்பொருளை எரிக்கவும், பலிபீடத்திலிருந்து தணலை அள்ளவும், தங்கக் குத்துவிளக்கில் இருந்த தீய்ந்துபோன திரிகளை எடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. இவை தூபக்கரண்டிகள் என்றும் அழைக்கப்பட்டன. (யாத் 37:23; 2 நாளா 26:19; எபி 9:4).

☞ கருவாய்ப்பட்டை:
கருவாய்ப்பட்டை மரத்திலிருந்து (சினமோமம் காஸியா) கிடைக்கும் பொருள். இந்த மரம், லவங்கப்பட்டை மர வகையைச் சேர்ந்தது. நறுமணப் பொருளாகவும் பரிசுத்த அபிஷேகத் தைலம் செய்வதற்காகவும் கருவாய்ப்பட்டை பயன்படுத்தப்பட்டது. (யாத் 30:24; சங் 45:8; எசே 27:19).

☞ கல்தேயா, கல்தேயர்கள்:
ஆரம்பத்தில் டைகிரீஸ் மற்றும் யூப்ரடிஸ் ஆறுகளின் டெல்டா பகுதிதான் கல்தேயா தேசமாக இருந்தது; அங்கே வாழ்ந்த மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். காலப்போக்கில், பாபிலோன் முழுவதும் கல்தேயா என்று அழைக்கப்பட்டது, பாபிலோனிய மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியல், வரலாறு, வானவியல், மொழிகள் ஆகியவற்றில் புலமை பெற்றவர்களையும், அதேசமயத்தில் மாயமந்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களையும் குறிப்பிடுவதற்குக்கூட “கல்தேயர்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (எஸ்றா 5:12; தானி 4:7).

☞ கல்லறை:
சில சமயங்களில், இந்த வார்த்தை தனிப்பட்ட ஒருவருடைய கல்லறையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற சமயங்களில், இறந்தவர்களின் நிலையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எபிரெய வார்த்தை “ஷியோல்”; கிரேக்க வார்த்தை “ஹேடீஸ்.” எல்லா செயல்களும் எல்லா நினைவுகளும் முடிவுக்கு வருகிற அடையாளப்பூர்வ இடம் அல்லது நிலை என வேதாகமம் விவரிக்கப்பட்டுள்ளது. (ஆதி 47:30).

☞ கவண்:
தோலாலான ஒரு பட்டை அல்லது மிருகங்களின் தசை நாண்கள், நாணல்கள், முடி ஆகியவற்றைக் கொண்டு பின்னப்பட்ட ஒரு வார். இதனுடைய அகலமான நடுப்பகுதியில், வீசியெறிய வேண்டிய பொருள் (பெரும்பாலும், கல்) வைக்கப்பட்டது. கவணின் ஒரு முனை, கையில் அல்லது மணிக்கட்டில் கட்டப்பட்டது; மறுமுனை இன்னொரு கையால் பிடித்துக்கொள்ளப்பட்டு, இழுத்துவிடப்பட்டது. பண்டைய தேசங்கள், கவண்கல் எறிகிறவர்களைத் தங்கள் படையில் வைத்திருந்தன. (நியா 20:16; 1 சாமு 17:50).

☞ களத்துமேடு:
தானியம் போரடிக்கப்பட்ட இடம்; இது வட்டமாகவும் சமதளமாகவும் இருந்தது. பெரும்பாலும், நன்றாகக் காற்று வீசுகிற உயரமான இடத்தில் இவை அமைக்கப்பட்டிருந்தன. (ரூத் 3:2; மத் 3:12).

வியாழன், 2 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஒ, ஓ



☞ ஒப்பந்தம்:
ஏதோ ஒன்றைச் செய்வதற்கோ செய்யாமல் இருப்பதற்கோ, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் அல்லது இரண்டு மனிதர்களுக்கு நடுவில் செய்யப்படுகிற உடன்படிக்கை. சில சமயங்களில், ஒருவர் மட்டுமே ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டியிருந்தது (இது ஒரு வாக்குறுதியாக இருந்தது). மற்ற சமயங்களில், இரண்டு தரப்பினருமே அந்த ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டியிருந்தது. கடவுள் மனிதர்களோடு செய்த ஒப்பந்தங்களைப் பற்றியும் தனி நபர்களும், கோத்திரங்களும், தேசங்களும், மக்கள் தொகுதிகளும் தங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியும் வேதாகமம் சொல்கிறது. ஆபிரகாமோடும், தாவீதோடும், இஸ்ரவேல் தேசத்தோடும் (திருச்சட்ட ஒப்பந்தம்), கடவுளுடைய இஸ்ரவேலர்களோடும் (புதிய ஒப்பந்தம்) கடவுள் செய்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. இவற்றைப் போன்ற ஒப்பந்தங்களால் நீண்ட கால நன்மைகள் கிடைத்திருக்கின்றன. (ஆதி 9:11; 15:18; 21:27; யாத் 24:7; 2 நாளா 21:7).

☞ ஓமர்:
இது ஒரு திட அளவை. 2.2 லிட்டருக்குச் சமம்; அதாவது எப்பாவில் பத்திலொரு பங்கு. (யாத் 16:16, 18).

☞ ஓய்வுநாள்:
இதற்கான எபிரெய வார்த்தைக்கு, “ஓய்வு எடுப்பது; நிறுத்துவது” என்று அர்த்தம். யூத வாரத்தின் ஏழாவது நாள். (வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம்வரை) சில பண்டிகை நாட்களும் ஓய்வுநாட்களாக இருந்தன. ஆலயத்தில் செய்யப்பட்ட குருத்துவச் சேவைகளைத் தவிர, ஓய்வுநாளில் வேறெந்த வேலையையும் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை. 7-ஆம் மற்றும் 50-ஆம் வருஷங்கள் ஓய்வு வருஷங்கள் என்று அழைக்கப்பட்டன. ஓய்வு வருஷங்களில், நிலம் பயிர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது. அதோடு, கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று எபிரெயர்கள் தங்கள் சகோதரர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஓய்வுநாள் பற்றிய திருச்சட்ட விதிமுறைகள் நியாயமாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் மதத்தலைவர்கள் வேறுபல விதிமுறைகளையும் அதனோடு சேர்த்தார்கள். அதனால், இயேசுவின் நாட்களில் வாழ்ந்த மக்களுக்கு அவற்றைக் கடைப்பிடிப்பது கஷ்டமாக இருந்தது. (யாத் 20:8; லேவி 25:4; லூக் 13:14-16; கொலோ 2:16).

☞ ஓரேப்:
ஓரேப் மலை.
சீனாய் மலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி ஓரேப் என்று அழைக்கப்பட்டது. சீனாய் மலை, ஓரேப் மலை என்றும் அழைக்கப்பட்டது. (யாத் 3:1; உபா 5:2).

வெள்ளி, 27 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஏ




☞ ஏத்தானீம்:
யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 7-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி முதல் மாதம். இது செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, இது திஷ்ரி என்று அழைக்கப்பட்டது. (1 இரா 8:2).

☞ ஏதோம்:
ஈசாக்கின் மகனான ஏசாவின் இன்னொரு பெயர். ஏசாவின் (ஏதோமின்) வம்சத்தார், சவக்கடலுக்கும் ஆகாபா வளைகுடாவுக்கும் இடையிலுள்ள சேயீர் மலைப்பகுதியை ஆக்கிரமித்தார்கள். இந்தப் பகுதி பின்பு ஏதோம் என்று அழைக்கப்பட்டது. (ஆதி 25:30; 36:8).

☞ ஏபோத்:
குருமார்கள் தங்களுடைய அங்கிமேல் அணிந்திருந்த உடை. தலைமைக் குரு ஒரு விசேஷ ஏபோத்தை அணிந்திருந்தார். இதன் முன்பகுதியில் விலை உயர்ந்த 12 கற்கள் பதிக்கப்பட்ட மார்ப்பதக்கம் இருந்தது. (யாத் 28:4,6).

☞ ஏரோது:
யூதர்களை ஆட்சி செய்த ஓர் அரச பரம்பரையின் குடும்பப் பெயர். இந்த ஆட்சியாளர்கள் ரோமர்களால் நியமிக்கப்பட்டார்கள். மகா ஏரோதுதான் அப்படி முதன்முதலில் நியமிக்கப்பட்டவன். எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டியவனும், இயேசுவைத் தீர்த்துக்கட்டுவதற்காகப் பிள்ளைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டவனும் இவன்தான். (மத் 2:16; லூ 1:5) இவனுடைய ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளை ஆளுவதற்கு, இவனுடைய மகன்களான ஏரோது அர்கெலாயுவும் ஏரோது அந்திப்பாவும் நியமிக்கப்பட்டார்கள். (மத் 2:22) கால்பங்கு தேசத்தை ஆட்சி செய்த ஏரோது அந்திப்பா, “ராஜா” என்று அழைக்கப்பட்டான். இவன், இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷ காலப்பகுதி முழுவதிலும், அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்திலுள்ள சம்பவங்கள் நடந்த காலப்பகுதி வரையிலும் ஆட்சி செய்தான். (மாற் 6:14-17; லூ 3:1, 19, 20; 13:31, 32; 23:6-15; அப் 4:28; 13:1) அதற்குப் பின்பு, மகா ஏரோதுவின் பேரனான முதலாம் ஏரோது அகிரிப்பா, ஆட்சிக்கு வந்த கொஞ்சக் காலத்திலேயே தேவதூதரால் கொல்லப்பட்டான். (அப் 12:1-6, 18-23) பிறகு, இவனுடைய மகனான இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவானான்; யூதர்கள் ரோமர்களுக்கு எதிராகக் கலகம் செய்த காலம்வரை இவன் ஆட்சி செய்தான். (அப் 23:35; 25:13, 22-27; 26:1, 2, 19-32).

☞ ஏரோதுவின் ஆதரவாளர்கள்:
இவர்கள் ஏரோதியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்; இவர்கள் தேசியவாத கட்சியைச் சேர்ந்தவர்கள். ரோமர்களின்கீழ் ஆட்சி செய்துகொண்டிருந்த ஏரோது ராஜாக்களின் அரசியல் லட்சியங்களை ஆதரித்தவர்கள். சதுசேயர்களில் சிலர் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். இயேசுவை எதிர்ப்பதற்காக பரிசேயர்களோடு இந்த ஏரோதியர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டார்கள். (மாற் 3:6).

☞ ஏறுதலின் பாடல்:
120 முதல் 134-வரையான சங்கீதங்களின் மேல்குறிப்பு. இதற்கு நிறைய அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், கடவுளை வணங்க எருசலேமுக்கு ‘ஏறிப்போனபோது’ இஸ்ரவேலர்கள் இந்த 15 சங்கீதங்களையும் சந்தோஷமாகப் பாடினார்கள் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். முக்கியமான மூன்று வருடாந்தரப் பண்டிகைகளுக்காக, யூதா மலைகளின் உச்சியில் அமைந்திருந்த எருசலேமுக்கு இஸ்ரவேலர்கள் ஏறிப்போனார்கள்.

திங்கள், 23 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் காணப்படுகின்ற பறவைகள்

 




(இவற்றை முகப் புத்தகத்தில் பதிவேற்றிய நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...)

வெள்ளி, 20 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஊ, எ




☞ ஊரீம், தும்மீம் : 
தேசத்தில் சிக்கலான பிரச்சினைகள் வந்தபோது, கர்த்தரின் தீர்மானத்தைத் தெரிந்துகொள்ள தலைமைக் குரு இவற்றைப் பயன்படுத்தினார். இவற்றால் குலுக்கல் போட்டு பார்த்தார். தலைமைக் குரு வழிபாட்டுக் கூடாரத்துக்குள் போனபோது, அவருடைய மார்ப்பதக்கத்துக்குள் இவை வைக்கப்பட்டன. பாபிலோனியர்கள் எருசலேமை அழித்த பிறகு இந்த வழக்கம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. (யாத். 28:30; நெகே. 7:65).

☞ எக்காளம் :
வாயினால் ஊதப்படும் உலோகக் கருவி. அறிவிப்பு செய்வதற்காகவும் இசை இசைப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. இரண்டு வெள்ளி எக்காளங்களை கர்த்தர் செய்யச் சொன்னதாக எண்ணாகமம் 10:2 சொல்கிறது; மக்களை ஒன்றுகூட்டுவதற்கும், ஒரு இடத்திலிருந்து புறப்படச் செய்வதற்கும், போர் அறிவிப்பு செய்வதற்கும் வெவ்வேறு தொனிகளில் இவை ஊதப்பட்டன. மிருகங்களின் கொம்புகளில் செய்யப்பட்ட ‘ஊதுகொம்பை’ போல வளைவாக இல்லாமல் இவை நேராக இருந்திருக்கலாம். ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளில் எக்காளங்களும் இருந்தன. ஆனால், இவை எப்படிச் செய்யப்பட்டிருந்தன என்று வேதாகமம் குறிப்பிடுவதில்லை. கர்த்தரின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டபோதும், அவர் மூலமாகச் சில முக்கியச் சம்பவங்கள் நடந்தபோதும் அடையாள அர்த்தத்தில் எக்காளம் முழங்கப்பட்டது. (2 நாளாக. 29:26; எஸ்றா 3:10; 1 கொரி. 15:52; வெளி 8:7-11:15).

☞ எட்டி :
இது பொதுவாக, பயங்கர கசப்பும், பயங்கர வாசமும் உள்ள செடி வகைகளைக் குறிக்கிறது. இவற்றின் தண்டுகள் மிகவும் உறுதியாக இருக்கும். ஒழுக்கக்கேடு, அடிமைத்தனம், அநியாயம், விசுவாசதுரோகம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகளை விவரிப்பதற்கு வேதாகமம் இந்த வார்த்தையை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 8:11-ல், “எட்டி” என்ற வார்த்தை கசப்பான, விஷத்தன்மையுள்ள ஒரு பொருளைக் குறிக்கிறது; இது அப்சிந்தே என்றும் அழைக்கப்படுகிறது. (உபா 29:18; நீதி 5:4; எரே 9:15; ஆமோ 5:7).

☞ எத்தியோப்பியா :
எகிப்தின் தெற்குப் பகுதியில் இருந்த பண்டைய தேசம். தற்போதைய எகிப்தின் தெற்குப் பகுதியும் தற்போதைய சூடானின் வடக்குப் பகுதியும் இதன் பாகமாக இருந்தன. சில இடங்களில், “கூஷ்” என்ற எபிரெயப் பெயருக்குப் பதிலாக இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எஸ்தர் 1:1).

☞ எதித்தூன் :
39, 62, 77-ஆம் சங்கீதங்களின் மேல்குறிப்பில் இருக்கும் பெயர். இதன் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ஒரு சங்கீதத்தை எப்படிப் பாட வேண்டும், அதாவது எந்தப் பாணியில் பாட வேண்டும் அல்லது எந்த இசைக் கருவி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அறிவுரையாக இது இருந்திருக்கலாம். எதித்தூன் என்ற பெயரில் லேவிய இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். அதனால், இந்தப் பாணி அல்லது இசைக் கருவி அவரோடோ அவருடைய மகன்களோடோ சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

☞ எப்பா :
இது ஒரு திட அளவை. தானியங்களை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரமும் எப்பா என்று அழைக்கப்பட்டது. இது ஒரு பாத் அளவுக்குச் சமமாக இருந்தது. அதனால் இதன் அளவு 22 லிட்டர். (யாத் 16:36; எசே 45:10)

☞ எப்பிராயீம் :
யோசேப்பின் இரண்டாவது மகனுடைய பெயர். பிற்பாடு, ஓர் இஸ்ரவேல் கோத்திரமும் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டது. இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பத்துக் கோத்திர ராஜ்யம் முழுவதும் எப்பிராயீம் என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், எப்பிராயீம் அதன் மிக முக்கியக் கோத்திரமாக இருந்தது. (ஆதி 41:52; எரே 7:15).

☞ எபிரெயர் :
இந்தப் பட்டப்பெயர் முதன்முதலில் ஆபிராமுக்கு (ஆபிரகாமுக்கு) கொடுக்கப்பட்டது. அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றியிருந்த எமோரியர்களிடமிருந்து இது அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. பிற்பாடு, ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் வம்சத்தாரைக் குறிப்பதற்காகவும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. (ஆதி 14:13; யாத் 5:3).

☞ எபிரெயு :
எபிரெயர்கள் பேசிய மொழி. இயேசுவின் காலத்துக்குள், இதில் நிறைய அரமேயிக் வார்த்தைகள் கலந்துவிட்டன. இந்த மொழியைத்தான் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பேசினார்கள். (அப் 26:14).

☞ எலூல் :
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 6-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 12-ஆம் மாதம். இது ஆகஸ்ட் பாதியில் ஆரம்பித்து செப்டம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 6:15)

வெள்ளி, 13 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ உ



☞ உதவி ஊழியர் :
இதற்கான கிரேக்க வார்த்தை டையக்கொனொஸ். இந்த வார்த்தை பெரும்பாலும், “ஊழியர்” அல்லது ‘வேலையாள்’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சபையிலுள்ள மூப்பர் குழுவுக்கு உதவியாக இருப்பவர் “உதவி ஊழியர்” என்று அழைக்கப்படுகிறார். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தகுதிகள் இருந்தால்தான் ஒருவர் உதவி ஊழியராகச் சேவை செய்ய முடியும். (1 தீமோ. 3:8-10, 12).

☞ உயிர்த்தெழுதல் :
இறந்தவர்கள் உயிரோடு எழுவது. அனஸ்டாசிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “எழுவது, நிற்பது” என்று அர்த்தம். இயேசு கிறிஸ்துவின்  உயிர்த்தெழுதலையும் சேர்த்து மொத்தம் 9 உயிர்த்தெழுதல்களைப் பற்றி வேதாகமம் சொல்கிறது.

☞ உலை, சூளை :
உலோகத் தாதுப்பொருளையோ உலோகத்தையோ உருக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிற அமைப்பு. மண்பாத்திரங்களைச் சுடுவதற்கும் சுண்ணாம்பை எரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிற அமைப்பு சூளை என்று அழைக்கப்படுகிறது. வேதாகம காலங்களில், உலையும் சூளையும் செங்கல் அல்லது கல்லால் அமைக்கப்பட்டிருந்தன. (ஆதி 15:17; தானி 3:17; வெளி 9:2).

☞ உறுதிமொழி :
ஒரு விஷயம் உண்மையென்று ஆணையிட்டுக் கொடுப்பது அல்லது ஒரு விஷயத்தைச் செய்வதாகவோ செய்யாமல் இருப்பதாகவோ சத்தியம் செய்வது. பொதுவாக, இது தன்னைவிட உயர்ந்தவரிடம், முக்கியமாகக் கடவுளிடம் நேர்ந்துகொள்வதைக் குறிக்கிறது. ஆபிரகாமிடம் செய்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்காக கர்த்தர் உறுதிமொழி கொடுத்தார். (ஆதி 14:22; எபி 6:16, 17).

☞ உன்னத(ம்) :
இந்த வார்த்தை மிகமிக உயர்ந்த ஸ்தானத்தைக் குறிக்கிறது. (சங் 83:18) இது பொதுவாக “கடவுள்” என்ற வார்த்தையோடும், “பேரரசர்” என்ற வார்த்தையோடும் சேர்ந்து வருகிறது. (உபா. 32:8; தானி. 7:25; சங். 78:56; 69:6; அப். 7:48) கர்த்தர் தான் மற்ற எல்லாரையும்விட மிகமிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறது. வேதாகமத்தில் முதன்முதலாக ஆதியாகமம் 14:18-ல் இது காணப்படுகிறது. அங்கே “உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்துவந்த குரு” என்று மெல்கிசேதேக்கு அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ இ




☞ இகாயோன்:
இசை சம்பந்தப்பட்ட குறிப்பு. இதை சங்கீதம் 9:16-ல் பார்க்கலாம். பாட்டின் இடையில் வரும் பயபக்தியூட்டுகிற, குறைந்த சுருதியில் இசைக்கப்படுகிற யாழ் இசை அல்லது தியானிப்பதற்காகப் பாட்டின் இடையில் வரும் நிறுத்தம்.

☞ இசைக் குழுவின் தலைவன்:
சங்கீதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இதற்கான எபிரெய வார்த்தை, குறிப்பிட்ட விதத்தில் பாடல்களை ஒழுங்கமைத்த, அந்தப் பாடல்கள் பாடப்படுவதை மேற்பார்வை செய்த, லேவியப் பாடகர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஒத்திகை பார்த்த, இசை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய நபரைக் குறித்தது. மற்ற மொழிபெயர்ப்புகளில், “இராகத்தலைவன்” அல்லது “பாடகர் தலைவன்” என்று உள்ளது. (சங் 4 மற்றும் 5-ன் மேல்குறிப்பு).

☞ இடுக்கிகள்:
தங்கத்தால் செய்யப்பட்ட கருவிகள், பார்ப்பதற்குக் குறடு போல இருந்திருக்கலாம். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் இருந்த விளக்குகளை அணைப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டன. (யாத். 37:23).

☞ இல்லிரிக்கம்:
கிரேக்கு தேசத்தின் வடமேற்கில் இருந்த ரோம மாகாணம். ஊழியத்திற்காக இல்லிரிக்கம்வரை பவுல் பயணம் செய்தார் என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால், அவர் இல்லிரிக்கத்தில் ஊழியம் செய்தாரா அல்லது இல்லிரிக்கம் வரைதான் ஊழியம் செய்தாரா என்று சொல்வதில்லை. (ரோமர் 15:19).

☞ இறைவாக்குரைப்பவர்:
கடவுளுடைய தீர்மானங்களைப் புரிந்துகொள்ளும் திறனை கடவுளிடமிருந்தே பெற்றவர்; மற்ற மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் கடவுள் இவர்களுடைய கண்களைத் திறந்திருந்தார். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “பார்ப்பது” என்று அர்த்தம். இது நேரடியாகப் பார்ப்பதையோ அடையாள அர்த்தத்தில் பார்ப்பதையோ குறிக்கலாம். ஜனங்களுக்குப் பிரச்சினை வந்தபோது, இறைவாக்கு சொல்பவரிடம் போய் ஞானமான அறிவுரைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். (1 சாமு. 9:9).

☞ இஸ்ரவேல்:
யாக்கோபுக்குக் கடவுள் கொடுத்த பெயர். பிற்பாடு, ஒரே காலப்பகுதியில் வாழ்ந்த அவருடைய வம்சத்தாரை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. யாக்கோபுடைய 12 மகன்களின் வம்சத்தார் இஸ்ரவேலின் மகன்கள், இஸ்ரவேல் வம்சத்தார், இஸ்ரவேல் மக்கள் (ஆண்கள்), இஸ்ரவேலர்கள் என்றெல்லாம் பெரும்பாலும் அழைக்கப்பட்டார்கள். தெற்கு ராஜ்யத்திலிருந்து பிரிந்த பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யமும் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். (கலா. 6:16; ஆதி. 32:28; 2 சாமுவேல் 7:23; ரோமர் 9:6).

வியாழன், 5 அக்டோபர், 2017

ஆரம்பத்தில் தமிழ் வேதாகமத்திலிருந்து  தற்போது வழக்கொழிந்துப் போன சொற்கள்...




☞ அகத்தியம் (எஸ் 4:8) - கட்டாயம், அவசியம்

☞ அகரதமான (ஏசா 14:15) - ஆழமான

☞ அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை

☞ அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு)

☞ அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.

☞ அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்

☞ அசூசம் (புலம்பல்) - தீட்டு

☞ அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்

☞ அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்

☞ அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு

☞ அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும், சூறையாடுதலும்

☞ ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர் சுருதி

☞ இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்

☞ ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)

☞ இளக்கரிப்பு (ஏசா 42:4) - சோர்ந்து போதல்

☞ உக்கல் (ஆப 3:16) - உறுத்துப் போதல்

☞ உசாவு துணை (யோபு 26:3) - உற்ற துணைவன்

☞ உம்பிளிக்கை (எஸ்றா 9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்)

☞ உறுமால் (அப் 19:12) - கைக்குட்டை துணி

☞ ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) - ஒரு தானிய வகை. (புதினா)

☞ கடாட்சம் (உன் 8:10) - அருட்பார்வை, கருணை பெறுதல்

☞ ஏகோபித்து (நியா 20:1) - ஒருமித்து

☞ கட்டியக்காரன் (தானி 3:4) - அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்

☞ கலாதி (எஸ்றா 4:15) - கலகம், சண்டை, புரட்சி

☞ கலிக்கம் (வெளி 3:18) - கண்ணிலிடும் மருந்து

☞ கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) - பிணைக் கைதிகள்

☞ கறளை (எரே 48:6) - பிரயோஜனமில்லாத

☞ காங்கை (ஏசா 25:5) - வெப்பம்

☞ காய்மகாரம் (1சாமு 18:9) - பொறாமை

☞ கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) - செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்.

☞ கிரித்தியங்கள் (நியா 2:19) - தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்

☞ குருக்கு (ஆதி 3:18) - நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)

☞ குங்கிலியம் (யாத் 30:34) - ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது)

☞ குலாரி வண்டில் (ஏசா 66:20) - மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு

☞ கொறுக்கை (ஏசா 19:6) - கோரைப்புல் / நாணல்

☞ கொடி மாசி (யோபு 38:37) - நிலையற்று அலையும் மேகங்கள்

☞ கும்பு (எசே 7:14) - ஜனக்கூட்டம்

☞ கொம்மை (நெகே 3:1,11) - இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்.

☞ கோரி (யோபு 21:32) - கல்லறை, சமாதி

☞ சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) - மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்

☞ சம்பாரம் (எசே 24:10) - உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.

☞ சலக்கரணை (2 இராஜா 4:13) - கரிசணையோடு

☞ சளுக்கு (எரே 5:28) - நயமாக பேசுதல்

☞ சன்னது (எஸ்றா 7:11) - ஆவணம், கடிதம், அரசாணை

☞ சர்ப்பனை (அப் 25:3) - வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி

☞ சன்னதக்காரன் (உபா 18:11) - பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்

☞ சுயம்பாகி (ஆதி 40:1) - சமையற்காரன்

☞ சீதளம் (ஆதி 8:22) - பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்

☞ சிரேஷ்டம் (நாகூம் 3:8) - தலை சிறந்தது.

☞ சொகுசா (எசே 1:4,8:2) - துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.

☞ சுணை (எரே 51:27) - கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு.

☞ தகசுத்தோல் (யாத் 25:5,26:14) - கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)

☞ தஸ்திர அறை (எஸ் 6:1) - பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை

☞ தர்ப்பணம் (யாத் 38:8) - கண்ணாடி (வெண்கல கண்ணாடி)

☞ தாக்கீது (தானி 6:7,8,12) - ஆணை

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஆ



☞ ஆசியா : கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின்படி, இன்றைய துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியையும், சாமு, பத்மு போன்ற சில கடலோரத் தீவுகளையும் உள்ளடக்கிய ரோம மாகாணம். இதன் தலைநகரம் எபேசு. (அப் 20:16; வெளி 1:4).

☞ ஆதார் : பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 12-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 6-ஆம் மாதம். இது பிப்ரவரி பாதியில் ஆரம்பித்து மார்ச் பாதியில் முடிவடைந்தது. (எஸ்தர் 3:7).

☞ ஆப் : பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 5-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 11-ஆம் மாதம். இது ஜூலை பாதியில் ஆரம்பித்து ஆகஸ்ட் பாதியில் முடிவடைந்தது. பைபிளில் இதன் பெயர் குறிப்பிடப்படவில்லை; வெறுமனே “ஐந்தாம் மாதம்” என்று சொல்லப்பட்டுள்ளது. (எண் 33:38; எஸ்றா 7:9).

☞ ஆபிப் : யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி முதலாம் மாதத்துக்கும், அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 7-ஆம் மாதத்துக்கும் ஆரம்பத்தில் இருந்த பெயர். ஆபிப் என்பதற்கு “பச்சைக் கதிர்கள்” என்று அர்த்தம். இது மார்ச் பாதியில் ஆரம்பித்து ஏப்ரல் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிய பின்பு இது நிசான் என்று அழைக்கப்பட்டது. (உபா 16:1).

☞ ஆமென் : “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாக நடக்கட்டும்” என்று அர்த்தம். “உண்மையாக, நம்பகமாக இருப்பது” என்ற அர்த்தத்தைத் தருகிற ஆமன் என்ற எபிரெய மூல வார்த்தையிலிருந்து இது வந்திருக்கிறது. ஓர் உறுதிமொழியையோ ஒரு ஜெபத்தையோ ஒரு வாக்கியத்தையோ ஆமோதிக்கும்போது, “ஆமென்” என்று சொல்லப்பட்டது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் “ஆமென்” இயேசு கிறிஸ்துவின் நாமம் என்றும் கூறுகின்றது. (உபா 27:26; 1நா 16:36; வெளி 3:14).

☞ ஆயத்த நாள் : ஓய்வுநாளுக்கு முந்தின நாள். இந்த நாளில்தான் ஓய்வுநாளுக்குத் தேவையான ஏற்பாடுகளை யூதர்கள் செய்தார்கள். இப்போது வெள்ளிக்கிழமை என்று அழைக்கப்படுகிற நாளின் சூரிய அஸ்தமனத்தோடு இந்த நாள் முடிவுக்கு வந்தது; பின்பு ஓய்வுநாள் ஆரம்பமானது. யூதர்களுக்கு ஒரு நாள் என்பது, ஒரு சாயங்காலத்தில் ஆரம்பித்து அடுத்த சாயங்காலத்தில் முடிந்தது. (மாற் 15:42; லூ 23:54).

☞ ஆராதனை மேடு : பொதுவாக மலை உச்சியிலோ குன்றின் உச்சியிலோ இருந்த வழிபாட்டு இடம் அல்லது மனிதர்களால் அமைக்கப்பட்ட மேடை. உண்மைக் கடவுளை வழிபடுவதற்காகச் சில சமயங்களில் இது பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பொய் தெய்வங்களை வழிபடுவதற்காகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. (எண் 33:52; 1 ராஜாக்கள் 3:2; எரே 19:5).

☞ ஆல்பா, ஒமேகா.
கிரேக்க எழுத்துக்களில், முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா. இவை இரண்டும் ஒன்றுசேர்ந்து வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் நாமமாக மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆல்பா, ஒமேகா என்ற வார்த்தைகளுக்கும், “முதலும் கடைசியும்,” ‘ஆரம்பமும் முடிவும்’ என்ற வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். (வெளி 1:8; 21:6; 22:13).

☞ ஆலய அர்ப்பணப் பண்டிகை : அந்தியோக்கஸ் எப்பிபானஸ் என்பவனால் தீட்டாக்கப்பட்ட ஆலயம் பிற்பாடு சுத்தப்படுத்தப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு வருஷமும் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிஸ்லே மாதம் 25-ஆம் தேதி ஆரம்பித்து மொத்தம் 8 நாட்களுக்கு இது கொண்டாடப்பட்டது. (யோவா 10:22).

☞ ஆலயம் : இடம்விட்டு இடம் மாற்றப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பதிலாக, எருசலேமில் கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடம். இஸ்ரவேலர்களுடைய வழிபாட்டின் மைய இடமாக இது இருந்தது. முதல் ஆலயத்தை சாலொமோன் கட்டினார், அது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு, இரண்டாவது ஆலயத்தை செருபாபேல் கட்டினார். பின்பு, மகா ஏரோது அதை மறுபடியும் கட்டினான். வேதாகமம் இதை ‘கர்த்தருடைய வீடு’ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறது. (யாத் 23:19; 34:26; 1ரா 6:1) ஆலயம் என்ற வார்த்தை, பிதா குடியிருக்கிற பரலோகத்தையும் குறிக்கிறது. (யாத் 25:8, 9; 2ரா 10:25; 1நா 28:10; வெளி 11:19).

☞ ஆவிகளோடு பேசுகிறவர்.
இறந்தவர்களோடு பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் நபர். (லேவி 20:27; உபா 18:10-12; 2ரா 21:6).

☞ ஆவியுலகத் தொடர்பு : உயிரோடு இருக்கிறவர்களிடம் செத்தவர்களின் ஆவியால் பேச முடியும் என்ற நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட பழக்கம். ஒருவர் சாகும்போது, உடல் அழிந்தாலும் அவருடைய ஆவி அழிவதில்லை என்றும், அது தன் பிடியில் சிக்கிய ஆட்களைப் பயன்படுத்தி மற்ற மனிதர்களோடு பேசுகிறது என்றும் நம்பப்படுகிறது. “ஆவியுலகத் தொடர்புகொள்வது” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஃபார்மக்கியா. “போதைப்பொருளைப் பயன்படுத்துவது” என்பது இதன் நேரடி அர்த்தம். பழங்காலத்தில், பில்லிசூனியம் செய்வதற்காகப் பேய்களிடம் சக்தியைக் கேட்கும்போது போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால், இந்த வார்த்தை, காலப்போக்கில் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டது. (கலா 5:20; வெளி 21:8).

☞ ஆழம் : தண்ணீரின் ஆழத்தை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அளவு. ஓர் ஆழம் என்பது 6 அடிக்குச் சமம். (அப் 27:28).

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ அ



☞ அகாயா - கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின்படி, கிரேக்கு தேசத்தின் தென் பகுதியில் இருந்த ரோம மாகாணம். இதன் தலைநகரம் கொரிந்து. பிலபனிஸ் தீபகற்பம் முழுவதும் கிரேக்கு தேசத்தின் மத்திய பகுதி முழுவதும் இதில் அடங்கும். (அப் 18:12).

☞ அசைவாட்டும் காணிக்கை - காணிக்கை வைத்திருப்பவரின் கைகளுக்குக் கீழே குரு தன்னுடைய கைகளை வைத்து, அவருடைய கைகளை முன்னும் பின்னும் ஆட்டுவார். அல்லது குருவே தன்னுடைய கைகளில் அந்தக் காணிக்கையை வைத்து முன்னும் பின்னும் ஆட்டுவார். இப்படிச் செய்வது, கர்த்தரிடம் அந்தக் காணிக்கையைக் கொடுப்பதற்கு அடையாளமாக இருந்தது. (லேவி 7:30).

☞ அண்ணகர் - ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதுதான் இதன் நேரடி அர்த்தம். பெரும்பாலும், அரண்மனைகளில் ராணிக்கும் மறுமனைவிகளுக்கும் பாதுகாவலர்களாகவோ பணியாளர்களாகவோ இப்படிப்பட்ட ஆண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆண்மை நீக்கம் செய்யப்படாத அரசவை அதிகாரிகளைக் குறிப்பதற்கும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுளுடைய சேவையை முழு மூச்சோடு செய்வதற்காகச் சுயக்கட்டுப்பாட்டோடு இருப்பவரை, பரலோக ‘ராஜ்ஜியத்துக்காக அண்ணகராய்’ இருப்பவர் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. (மத் 19:12, எஸ்தர் 2:3, அப் 8:27).

☞ அதலபாதாளம் - இதற்கான கிரேக்க வார்த்தை அபிஸோஸ். “படு ஆழமான,” “ஆழம் காண முடியாத” அல்லது “அளவிட முடியாத” என்பதுதான் இதன் அர்த்தம். அடைத்து வைக்க பயன்படுத்தப்படுகிற ஓர் இடத்தை அல்லது அடைத்து வைக்கப்பட்ட ஒரு நிலையைக் குறிப்பிட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கல்லறையையும் குறிக்கும். இதைத் தவிர வேறு சிலவற்றையும் குறிக்கும். (லூக் 8:31; ரோ 10:7; வெளி 20:3).

☞ அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம் - தலைமைக் குருவுடைய தலைப்பாகையின் முன்பகுதியில் கட்டப்பட்ட பளபளப்பான தகடு. இது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. இதில், “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்று எபிரெயுவில் பொறிக்கப்பட்டிருந்தது. (யாத் 39:30).

☞ அரமேயிக் - இந்த மொழி எபிரெய மொழியோடு நெருங்கிய தொடர்புடையது, இதை எழுதுவதற்கு எபிரெய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரம்பத்தில் அரமேயர்களால் பேசப்பட்டு வந்தது. காலப்போக்கில் அசீரியா மற்றும் பாபிலோன் சாம்ராஜ்யங்களில் வர்த்தகத்துக்கும் தகவல்தொடர்புக்கும் பயன்படுத்தப்பட்ட சர்வதேச மொழியாக ஆனது. பெர்சிய சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இது இருந்தது. (எஸ்றா 4:7) எஸ்றா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் சில பகுதிகள் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன. (எஸ்றா 4:8–6:18; 7:12-26; எரே 10:11; தானி 2:4).

☞ அராம் - அரமேயர்கள்.
இவர்கள் சேமின் மகனாகிய அராமின் வம்சத்தில் வந்தவர்கள். லீபனோன் மலைகளிலிருந்து மெசொப்பொத்தாமியா வரையுள்ள பகுதிகளிலும், வடக்கே டாரஸ் மலைகளிலிருந்து தெற்கே தமஸ்கு வரையிலும் அதற்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எபிரெய மொழியில் அராம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பிற்பாடு சீரியா என்று அழைக்கப்பட்டது. அதில் குடியிருந்தவர்கள் சீரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதி 25:20; உபா 26:5; ஓசி 12:12).

☞ அரியோபாகு - அத்தேனே நகரத்தில், அக்ரோபாலிசின் வட மேற்குப் பகுதியிலுள்ள உயரமான குன்று அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. இங்கே கூட்டங்கள் நடத்திய ஒரு சங்கமும் (நீதிமன்றமும்) அரியோபாகு என்று அழைக்கப்பட்டது. பவுலின் மத நம்பிக்கைகளைப் பற்றிக் கேட்பதற்காக தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்களும் எப்பிக்கூரர்களும் அவரை இங்கே கூட்டிக்கொண்டு வந்தார்கள். (அப் 17:19).

☞ அல்மோத் - இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. இதற்கு “கன்னிப்பெண்கள், இளம் பெண்கள்” என்று அர்த்தம். இளம் பெண்களின் உச்சக்குரலை இது குறிக்கலாம். இசையை அல்லது பக்கவாத்தியத்தை உயர் சுருதியில் வாசிக்க வேண்டும் என்பதைக் குறிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. (1நா 15:20; சங் 46-ன் மேல்குறிப்பு).

☞ அளவுகோல் - பொதுவாக இந்த அளவுகோல் நாணற்தண்டிலிருந்து செய்யப்பட்டது. இதன் நீளம் 6 முழம். சிறிய முழத்தின்படி, 2.67 மீட்டர் (8.75 அடி). பெரிய முழத்தின்படி, 3.11 மீட்டர் (10.2 அடி). (எசே 40:3, 5; வெளி 11:1).

☞ அஸ்தரோத் - போர் மற்றும் கருவளத்திற்கான கானானியப் பெண் தெய்வம். பாகாலின் மனைவி. (1 சாமு 7:3).

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பரிசுத்த வேதாகமத்திலுள்ள வரலாற்று இடங்கள்


தேவதாரு மரம்










வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

அடைக்கல நகரங்கள்


தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் தன்னைப் பழிவாங்க வருகிறவனிடமிருந்து தப்பித்து, அடைக்கலம் புகுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லேவி கோத்திரத்து நகரங்கள். கர்த்தர் சொன்னபடி மோசேயும் பின்பு யோசுவாவும் இவற்றைத் தேர்ந்தெடுத்தார்கள். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஆங்காங்கே மொத்தம் ஆறு நகரங்களை அடைக்கல நகரங்களாக ஒதுக்கினார்கள். தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் ஓர் அடைக்கல நகரத்துக்கு வந்தவுடன், நகரவாசலிலுள்ள பெரியோர்களிடம் நடந்த விஷயத்தைச் சொல்வான், அவர்களும் அவனை அங்கே தங்குவதற்கு அனுமதிப்பார்கள். வேண்டுமென்றே கொலை செய்தவன், இந்தச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஓர் ஏற்பாடு இருந்தது. அதாவது, அடைக்கலம் தேடி வருகிறவன், கொலை நடந்த நகரத்துக்குக் கொண்டுபோய் விசாரிக்கப்படுவான். நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டால் அவன் மறுபடியும் அடைக்கல நகரத்துக்குத் திரும்பி வந்து, தன் வாழ்நாள் முடியும்வரை அல்லது தலைமைக் குரு சாகும்வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது, அந்த நகரத்தைவிட்டு வெளியே போக அவனுக்கு அனுமதி இல்லை. (எண் 35:6, 11-15, 22-29; யோசு 20:2-8).

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 10

யூதா தேசம்


பாபிலோனியர்கள் யூதா தேசத்தை முற்றிலும் நாசமாக்குவார்கள் என்றும் நாடுகடத்தப்பட்ட யூதர்கள் திரும்பி வரும்வரை அது பாழாய் கிடக்கும் என்றும் பைபிள் முன்னறிவித்தது. (எரேமியா 25:8-11) இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையில் நிறைவேறியது என்பதை நம்புவதற்கு பலமான சான்று உள்ளது; அது, பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்ட சரித்திரப் பதிவாகும். நாடுகடத்தப்பட்ட யூதர்களில் தங்கள் தாயகத்திற்கு திரும்பிய முதல் தொகுதி வந்து சேர்ந்து சுமார் 75 ஆண்டுகள் கழித்து அது எழுதப்பட்டது. பாபிலோனிய அரசன், யூதர்களில் “பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்” என்று அது குறிப்பிடுகிறது. அதோடு, யூதா தேசத்தைக் குறித்து, “தேசம்... பாழாய்க்கிடந்த நாளெல்லாம்... ஓய்ந்திருந்தது” என்றும் குறிப்பிடுகிறது. (2 நாளாகமம் 36:20, 21) இதை நிரூபிக்கும் தொல்பொருள் அத்தாட்சிகளை காண்போம்;

எபிரெய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாலஸ்தீன தொல்பொருள் பேராசிரியர் ஈஃபிரேம் ஸ்டர்ன் என்பவர் பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பூர்வ இஸ்ரவேலின் பெரும்பாலான பகுதிகளை அசீரியர்களும் பாபிலோனியர்களும் நாசமாக்கினார்கள்; ஆனால், இத்தேசத்தை அசீரியர்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட நிலையும், பாபிலோனியர்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட நிலையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது என்று தொல்பொருள் அத்தாட்சி கூறுகிறது.” மேலுமாக, அவர் இவ்வாறு விளக்குகிறார்: “பாலஸ்தீனாவை அசீரியர்கள் ஆக்கிரமித்ததற்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன; ஆனால், பாபிலோனியர்கள் அத்தேசத்தை அழித்தபிறகு, அதை ஆக்கிரமித்ததற்கான அத்தாட்சி இல்லை... பெர்சியர்களுடைய காலப்பகுதி வரையிலுமாக அங்கே மக்கள் குடியிருந்ததற்கான எந்த அத்தாட்சியும் இல்லை... அங்கே எவரும் குடியிருந்ததற்கான சிறு தடயமும் இல்லை. அந்தக் காலப்பகுதியில், பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட ஒரு பட்டணத்தில்கூட மக்கள் குடியேறவில்லை.”

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் ஈ. ஸ்டேஜர் இதை ஒப்புக்கொள்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: பாபிலோனிய அரசர்கள், “பெலிஸ்தியா முழுவதிலும், அதைத் தொடர்ந்து யூதா முழுவதிலும் தீக்கிரையாக்கும் கொள்கையை கையாண்டதால் யோர்தான் நதியின் மேற்குப் பகுதி பொட்டல் காடானது.” அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “பாபிலோனியர்களைக் கைப்பற்றி அரசாண்ட பெர்சிய அரசன் மகா கோரேசின் காலத்தில்தான்... எருசலேமிலும் யூதாவிலும் மக்கள் மீண்டும் குடியிருந்ததற்கான தொல்பொருள் அத்தாட்சிகள் கிடைத்திருக்கின்றன. ஏனென்றால் அப்போதுதான் நாடுகடத்தப்பட்ட யூதர்கள் அநேகர் தங்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தார்கள்.”

யூதா பாழாய் கிடப்பதைக் குறித்த கர்த்தரின் வார்த்தை உண்மையில் நிறைவேறியது. கர்த்தர் முன்னறிவிப்பது நிச்சயம் நிறைவேறும். (ஏசாயா 55:10, 11) ஆகவே, கர்த்தர் மீதும் அவருடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குறுதிகள்மீதும் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். (2 தீமோத்தேயு 3:⁠16).

வெள்ளி, 21 ஜூலை, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 9

இயேசு கிறிஸ்து வாழ்ந்ததிற்கான இன்னுமொரு அத்தாட்சி;


“இயேசு வாழ்ந்ததற்கு அத்தாட்சி கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.” இப்படித்தான் வேதாகமம் சார்ந்த தொல்லியல் ஆய்வு (நவம்பர்/டிசம்பர் 2002) என்ற ஆங்கில இதழின் அட்டை பக்கம் அறிவித்தது. சுண்ணாம்பு கல்லில் இழைக்கப்பட்ட ஓர் எலும்பு பெட்டி அந்தப் பத்திரிகையின் அட்டையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. 70-⁠க்கும் இடைப்பட்ட குறுகிய காலங்களில் இத்தகைய எலும்பு பெட்டிகள் யூதர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இந்தப் பெட்டியின் ஒரு பக்கத்தில் அரமிய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதில், “யோசேப்பின் குமாரனும், இயேசுவின் சகோதரனுமாகிய யாக்கோபு” என எழுதப்பட்டிருந்ததாக அறிஞர்கள் ஒத்துக்கொண்டனர்.

நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுவுக்கு யாக்கோபு எனப்பட்ட ஒரு சகோதரன் இருந்தார் என்றும், அவர் மரியாளின் கணவராகிய யோசேப்பின் மகனாக கருதப்பட்டார் என்றும் வேதாகமம் கூறுகிறது. இயேசு தமது சொந்த ஊரில் போதித்த சமயத்தில், அந்தக் கூட்டத்தார் ஆச்சரியப்பட்டு, “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?” என்று கேட்டார்கள். (மத்தேயு 13:54-56; லூக்கா 4:22; யோவான் 6:42).

ஆம், அந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் நசரேயனாகிய இயேசுவைப் பற்றிய வருணனைக்குப் பொருந்துகின்றன. அந்தப் பெட்டியில் யாக்கோபு என குறிப்பிடப்பட்டுள்ளது இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாக இருந்தால், இயேசு வாழ்ந்ததற்கு “வேதாகமத்தை தவிர மிகப் பழமையான தொல்பொருள் அத்தாட்சி” இதுவாகத்தான் இருக்கும் என அடித்துக் கூறுகிறார் ஆன்ட்ரே லெமர்; இவர் பழங்கால கல்வெட்டுகளைப் பற்றி சொல்லும் நிபுணரும் வேதாகமம் சார்ந்த தொல்லியல் ஆய்வு பத்திரிகையில் வெளிவந்ததாக மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையின் எழுத்தாளரும் ஆவார். “பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்த மனிதர்களிலேயே மிக முக்கியமான நபரைப் பற்றிய நிஜமான, காணக்கூடிய அத்தாட்சிதான்” இந்த எலும்பு பெட்டி என இப்பத்திரிகையின் பதிப்பாசிரியர் ஹெர்ஷெல் ஷாங்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இருந்தாலும், அந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள வாசிக்கத்தக்க அம்மூன்று பெயர்களும் முதல் நூற்றாண்டில் மிகவும் சகஜமானவை. ஆகவே, இயேசு கிறிஸ்துவின் குடும்பம் அல்லாமல், யாக்கோபு, யோசேப்பு, இயேசு என்ற பெயர்களில் நபர்களைக் கொண்ட வேறொரு குடும்பம் இருந்திருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. “கி.பி. 70-⁠க்கு முன்பு எருசலேமில் வாழ்ந்த இரண்டு தலைமுறையினரில், . . . ‘யோசேப்பின் குமாரனும், இயேசுவின் சகோதரனுமாகிய யாக்கோபு’ என அழைக்கப்படுகிறவர்கள் ஒருவேளை சுமார் 20 பேர் இருந்திருக்கலாம்” என லெமர் குறிப்பிடுகிறார். என்றபோதிலும், இந்தப் பெட்டியில் பொறிக்கப்பட்டுள்ள யாக்கோபு என்ற பெயர் இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாகிய யாக்கோபுதான் என்பதற்கு 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக அவர் கருதுகிறார்.

இதிலுள்ள எழுத்துப் பொறிப்புகள் இயேசு கிறிஸ்துவின் ஒன்றுவிட்ட உடன் சகோதரனாகிய யாக்கோபையே குறிக்கிறது என்பதை சிலர் நம்புவதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. இறந்துபோனவருடைய தகப்பனார் பெயரை சேர்த்து குறிப்பிடுவது சாதாரண பழக்கமாக இருந்தாலும், ஒரு சகோதரனுடைய பெயரை சேர்த்து குறிப்பிடுவது அபூர்வமே. ஆகவே, இந்த இயேசு முக்கியமான ஒருவராக இருக்க வேண்டும் என்றும், இவர் கிறிஸ்தவத்தின் ஸ்தாபகராகிய இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் சிலர் நம்புகின்றனர்.

எலும்பு பெட்டி என்பது; கல்லறையில் வைக்கப்பட்ட உடல் அழுகியப் பிறகு இறந்தவருடைய எலும்புகளைப் போட்டு வைக்கும் பெட்டி அல்லது பேழைதான் அது. எருசலேமைச் சுற்றிலுமிருந்த கல்லறைகளிலிருந்து இந்தப் பெட்டிகளில் பல கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. யாக்கோபின் பெயர் பொறிக்கப்பட்ட இந்தப் பெட்டி பண்டைக்கால பொருட்கள் கிடைக்கும் சந்தையிலிருந்து பெறப்பட்டது, அதிகாரப்பூர்வமான அகழாய்வு இடத்திலிருந்து அல்ல. இப்பண்டைய பொருளை அதன் சொந்தக்காரர் 1970-களில் சில டாலருக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்தப் பெட்டி எப்படி வந்தது என்பது ஒரு மர்மமாக இருக்கிறது. “ஒரு பண்டைக்கால பொருள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது என்பதையும், சுமார் 2,000 ஆண்டுகளாக எங்கிருந்தது என்பதையும் உங்களால் சொல்ல முடியாவிட்டால், அந்தப் பொருளுக்கும் அது குறிப்பிடும் ஆட்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி உங்களால் ஊகிக்க முடியாது” என நியு யார்க்கின் பார்ட் கல்லூரி பேராசிரியர் புரூஸ் சில்டன் கூறுகிறார்.

தொல்லியல் பின்னணி இல்லாததை ஈடுகட்டுவதற்கு, இஸ்ரேலின் நிலவியல் அளவைத் துறைக்கு (Geological Survey of Israel) அந்தப் பெட்டியை ஆன்ட்ரே லெமர் அனுப்பினார். அந்தப் பெட்டி கி.பி. முதல் நூற்றாண்டில் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் சுண்ணாம்புக் கல்லால் தயாரிக்கப்பட்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர். “நவீன கருவிகளோ பொருட்களோ பயன்படுத்தப்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை” என்று கூறினர். இருந்தாலும், “அது இயேசுதான் என்பதற்கு சூழ்நிலைச் சான்று பலமாக இருக்கிறது, என்றாலும் அது சூழ்நிலைச் சான்றுதான்” என நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்த வேத கல்விமான்கள் கருத்துத் தெரிவித்தனர்.

“படித்த எவருமே இயேசு வாழ்ந்தார் என்பதைக் குறித்து இன்று சந்தேகப்பட மாட்டார்கள்” என டைம் பத்திரிகை குறிப்பிட்டது. என்றாலும், இயேசு வாழ்ந்தார் என்பதற்கு பரிசுத்த வேதாகமத்தைத் தவிர வேறு அத்தாட்சியும் வேண்டும் என பலர் நினைக்கின்றனர். இயேசு கிறிஸ்துவை நம்புவதற்கு தொல்லியல் ஆதாரம் அவசியமா? 

வெள்ளி, 14 ஜூலை, 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 8

பீம் என்றால் என்ன?



“பீம்” என்ற வார்த்தை வேதாகமத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. சவுல் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர் தங்களுடைய உலோக ஆயுதங்களைத் தீட்டுவதற்கு பெலிஸ்த கொல்லர்களிடம் போக வேண்டியிருந்தது. “தீட்டுவதற்கான கூலி, கலப்பைக் கொழு, மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடரி, தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் எட்டு கிராம் அளவுள்ள நாணயம் [பீம்] ஆகும்” என்பதாகப் வேதாகமம் குறிப்பிடுகிறது. (⁠1 சாமுவேல் 13:21).

பீம் என்றால் என்னவென்பது கி.பி. 1907 வரை ஒரு புதிராக இருந்தது; அவ்வருடத்தில்தான் முதன்முதலாக பீம் எடைக்கல் பூர்வ பட்டணமாகிய கேசேரிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. “பீம்” என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பது ஆரம்ப கால வேதாகம மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கடினமாக இருந்தது. உதாரணமாக, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு 1 சாமுவேல் 13:21-ஐ இவ்விதமாக மொழிபெயர்க்கிறது: “கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது.”

பீம் என்பது சராசரியாக 7.82 கிராமுக்குச் சமமான எடை அல்லது எபிரெயர்களின் அடிப்படை அலகான ஒரு சேக்கலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்குச் சமமான எடை என இன்றைய அறிஞர்கள் அறிந்திருக்கின்றனர். இஸ்ரவேலரின் ஆயுதங்களை கூர்மையாக்குவதற்கு பீம் அளவு வெள்ளித் துண்டுகளையே பெலிஸ்தர் கூலியாக வசூலித்தனர். யூத ராஜ்யமும் அதன் தலைநகரான எருசலேமும் கி.மு. 607-⁠ல் வீழ்ச்சியடைந்த பிறகு சேக்கல் எடை புழக்கத்திலிருந்து மறைந்தது. எபிரெய வேதாகமத்தின் சரித்திர மெய்மைக்கு பீம் எவ்வாறு சான்றளிக்கிறது என்பதனை இனி விழிப்போம்,

ஒன்று சாமுவேல் புத்தகம் உட்பட எபிரெய வேதாகம புத்தகங்கள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியில்தான், அதாவது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து முதல் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில்தான் எழுதப்பட்டதாக சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள். ஆகையால், “இந்தப் புத்தகங்கள் எல்லாம் . . . ‘சரித்திர ஆதாரமற்றவை,’ இவற்றிலிருந்து ‘வேதாகமம் குறிப்பிடும் இஸ்ரவேலைப்’ பற்றியோ, ‘பூர்வ இஸ்ரவேலை’ பற்றியோ உண்மையான சரித்திரப்பூர்வ தகவல்களைப் பெற முடியாது. ஏனெனில் இவை எல்லாம் யூத, கிறிஸ்தவ இலக்கிய கண்டுபிடிப்புகள் மட்டுமே” என்கிறார்கள்.

ஆனால், 1 சாமுவேல் 13:21-⁠ல் சொல்லப்பட்டுள்ள பீம் அளவை பற்றி, மத்திய கிழக்கு தொல்பொருள் மற்றும் மானிடவியல் பேராசிரியரான வில்லியம் ஜி. டேவர் இவ்வாறு கூறுகிறார்: “இந்த எடை அளவுகள் கிரேக்க-ரோம காலப்பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர்களின் ‘கற்பனையில் உருவாகியிருக்க’ முடியாது. ஏனெனில் அந்தக் காலப்பகுதிக்குள் இந்த எடைகள் எல்லாம் மறக்கப்பட்டு போய் பல நூற்றாண்டுகள் ஆகியிருந்தன. உண்மையில், 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பீம் என்ற எபிரெய வார்த்தை பொறிக்கப்பட்ட எடைகள் அகழ்வாராய்ச்சியில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படும் வரை... வேதாகம வசனத்தின் இச்சிறு பகுதி... புரியாப் புதிராகவே இருந்தது. வேதாகம கதைகள் எல்லாம் கிரேக்க-ரோம காலப்பகுதியின் ‘இலக்கிய கண்டுபிடிப்புகளாக’ இருந்தால், இந்தக் குறிப்பிட்ட கதை எபிரெய வேதாகமத்தில் எவ்வாறு இடம்பெற்றது? பீம் பற்றிய வசனம் ‘ஒரு சிறு நுட்பவிவரம் மட்டுமே’ என ஒருவர் வாதிடலாம். அது உண்மைதான். ஆனால் சிறு நுட்பவிவரங்களின் தொகுப்புதான் ‘சரித்திரம் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே.’

(பீம் எடை அளவு, ஒரு சேக்கலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமம்)